ரயில் நிலையத்தில் அமைச்சர் மீது வெடிகுண்டு வீச்சு: காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டம் நிம்திதா ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த அம்மாநில தொழிலாளர் நலத்துறை ஜாகிர் உசைன் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பதற்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டம் நிம்திதா ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த அம்மாநில தொழிலாளர் நலத்துறை ஜாகிர் உசைன் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநில தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜாகிர் உசைன் புதன்கிழமை இரவு முர்ஷிதாபாத் மாவட்டம் நிம்திதா ரயில் நிலையம் சென்றார். அங்கிருந்து கொல்கத்தா செல்லும் ரயிலில் ஏறுவதற்காக பிளாட்பாரத்தில் காத்திருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அமைச்சர் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதுகுறித்து முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் கூறியதாவது: குண்டுகள் வெடித்து சிதறியதில் அமைச்சர் ஜாகிர் உசைன் மற்றும் சிலர் பலத்த காயமடைந்தனர். அமைச்சருக்கு ஒரு கை மற்றும் ஒரு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த அனைவரையும் போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறினார்.
பின்னர் அமைச்சர் ஜாகிர் உசைன் மேல்சிகிச்சைக்காக கொல்கத்தா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முர்ஷிதாபாத்தில் அமைச்சர் ஜாகிர் உசைன் மீது அடையாளம் தெரியாத நபர்கள் வெடிகுண்டு வீசியது மேற்கு வங்க காவல்துறையின் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், இந்த வழக்கை சிஐடி போலீஸார் ஏற்று நடத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவத்தை அடுத்து நிம்திதா ரயில் நிலையத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.