தூங்கிக் கொண்டிருந்த கணவரின் முகத்தில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி
வேலைக்குச் சென்றுவிட்டு தினமும் தாமதமாக வீட்டுக்கு வருவதால் அதிருப்தி அடைந்த மனைவி, கணவர் உறங்கிக் கொண்டிருந்த போது அவரது முகத்தில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றியுள்ளார்.
போபால்: வேலைக்குச் சென்றுவிட்டு தினமும் தாமதமாக வீட்டுக்கு வருவதால் அதிருப்தி அடைந்த மனைவி, கணவர் உறங்கிக் கொண்டிருந்த போது அவரது முகத்தில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் 35 வயதாகும் சிவகுமாரியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்த தம்பதிக்கு திருமணமாகியுள்ளது. தினக் கூலி தொழிலாளியான அரவிந்த் அஹிர்வார் (38), முகத்தில் எண்ணெய் கொட்டியதால் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Advertisement
சம்பவம் குறித்து அரவிந்தின் சகோதரர் கூறுகையில், இந்த தம்பதிக்கு அவ்வப்போது சண்டை வந்தாலும், பெற்றோர் தலையிட்டு சமாதானம் செய்வது வழக்கம். நேற்றும் இதுபோல இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. ஆனால் திடீரென காலை 5 மணிக்கு கொதிக்கும் எண்ணெயை தூங்கிக் கொண்டிருந்த அரவிந்தின் முகத்தில் ஊற்றியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிச் சென்ற அவரது பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறுகிறார்.