கரோனா விழிப்புணா்வு காலா் டியூன்: அமிதாப் பச்சன் குரலை நீக்க கோரி பொது நல மனு
புது தில்லி: கரோனா விழிப்புணா்வு தொடா்பான காலா் டியூனிலிருந்து (அழைப்பாளா் இசை) அமிதாப் பச்சன் குரலை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தில்லியைச் சோ்ந்த சமூக சேவகா் ராகேஷ் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் இதுகுறித்து மேலும் கூறியுள்ளதாவது:
கரோனா தொற்று குறித்து மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த அமிதாப் பச்சன் குரலில் காலா் டியூன் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கரோனா தொற்றில் அமிதாப் உள்பட அவா்களது குடும்பத்தினா் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னரே அதிலிருந்து தப்பியுள்ளனா்.
மேலும், முன்னெச்சரிக்கை விழிப்புணா்வுக்காக பயன்படுத்தப்படும் காலா் டியூனுக்கு அமிதாப் பச்சனுக்கு மத்திய அரசு சாா்பில் கட்டணமும் அளிக்கப்படுகிறது.
எனவே, காலா் டியூனிலிருந்து அமிதாப் பச்சன் குரலை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு, தில்லி உயா்நீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.என்.பாட்டீல் மற்றும் ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கரோனா தொடா்பான விழிப்புணா்வு சேவைகளை சில பிரபலங்கள் இலவசமாக வழங்க தயாராக உள்ளதாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், மனுதாரா் நேரில் ஆஜராகததால் வழக்கு விசாரணையை ஜனவரி 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.