முகப்பு
இந்தியா

2019 -இல் 20 ஆயிரம் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பணியமர்த்தப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் 2019 -ஆம் ஆண்டில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
பகிர்:

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பணியமர்த்தப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் 2019 -ஆம் ஆண்டில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 70 சதவீதத்துக்கு மேல் காவல் நிலைய அதிகாரிகள் நிலையில் நடைபெற்றுள்ளது.
இது குறித்து மத்திய உள்துறையின் கீழ் உள்ள போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறியுள்ளதாவது:
கடந்த 2019 -ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள் 20,637 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவல் நிலைய அதிகாரிகள், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், உதவி ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், துணை ஆணையர்கள், டிஐஜி, ஐஜி, கூடுதல் காவல் ஆணையர், காவல் ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஓராண்டுக்குள் 12 காவல் ஆணையர்களும், ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் 12 காவல் ஆணையர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 6 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காவல் நிலைய அதிகாரிகள் நிலையில் ஓராண்டுக்குள் 8,540 பேர், இரண்டு ஆண்டுகளுக்குள் 6,375 பேர் என மொத்தம் 14,915 பேர் (72.27 சதவீதம்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக, மத்திய பிரதேச மாநிலத்தில் 4,209 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
துணைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் உதவி ஆணையர் நிலையில் 20.90 சதவீத அளவுக்கு இடமாற்றம் நடைபெற்றுள்ளது. இதில் ஓராண்டுக்குள் 2,424 பேர், ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் 1,891 பேர் என மொத்தம் 4,315 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 
இதில் அதிகபட்சமாக, பணியமர்த்தப்பட்ட ஓராண்டுக்குள் தமிழகத்தில் 525 பேரும், ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் உத்தர பிரதேசத்தில் 701 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல 1,118 (5.41 சதவீதம்) மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், துணை ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஓராண்டுக்குள் 602 பேரும், ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் 516 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக, பணியமர்த்தப்பட்ட ஓராண்டுக்குள் தமிழகத்தில் 134 பேரும், ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் மகாராஷ்டிரத்தில் 133 பேரும் இடமாற்றப்பட்டுள்ளனர். 
டிஐஜி, ஐஜி, இணை மற்றும் கூடுதல் ஆணையர் பதவிகளில் உள்ளவர்களில் ஓராண்டுக்குள் 153 பேர், ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் 112 பேர் என மொத்தம் 265 பேர் (1.28 சதவீதம்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக, பணியமர்த்தப்பட்ட ஓராண்டுக்குள் உத்தர பிரதேசத்தில் 15 பேரும், ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் மகாராஷ்டிரத்தில் 22 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 ஜார்க்கண்ட் மற்றும் சில யூனியன் பிரதேசங்களின் புள்ளிவிவரங்கள் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →