மும்பை புறநகர் ரயிலில் பொதுமக்கள் எந்தெந்த நேரத்தில் பயணிக்கலாம்?
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் ரயிலில் பயணிக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கி முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் ரயிலில் பயணிக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கி முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிறுத்தப்பட்டிருந்த ரயில் போக்குவரத்து கடுமையான கட்டுப்பாடுகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. எனினும் பொதுமக்கள் பயணிக்க அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், நேரக் கட்டுப்பாடுகளுடன் மும்பை பயணிகள் ரயிலில், பொதுமக்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் காலையில் முதல் ரயில் சேவை தொடங்கி காலை 7 மணி வரையிலும், பிறகு 12 மணி முதல் 4 மணி வரையிலும், இரவு 9 மணி முதல் கடைசி ரயில் சேவை வரையிலும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
இந்த நேரங்கள் தவிர, பிற நேரங்களில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோரும், முன்களப் பணியாளர்களும், தனியாகப் பயணிக்கும் பெண்களும், அரசால் வழங்கப்பட்ட சிறப்புப் பயணச் சலுகைச் சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் முதல் ரயில்களில் பயணிக்க பெண் பயணிகளை மட்டும் அனுமதிக்குமாறு ரயில்வே அமைச்சகத்தை மாநில அரசு கேட்டுக் கொண்டதை அடுத்த பெண்கள் மட்டும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.