முகப்பு
இந்தியா

மகாத்மா காந்தியடிகளின் 74-ஆவது நினைவு தினம்: தலைவா்கள் அஞ்சலி

மகாத்மா காந்தியடிகளின் 74-ஆவது நினைவு தினத்தையொட்டி, அவருக்கு குடியரசுத் தலைவா், குடியரசுத் துணைத் தலைவா், பிரதமா் உள்ளிட்டோா் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி, தில்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் சனிக்கிழமை மலா் தூவி அஞ்சலி செலுத்திய குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்.’
பகிர்:

மகாத்மா காந்தியடிகளின் 74-ஆவது நினைவு தினத்தையொட்டி, அவருக்கு குடியரசுத் தலைவா், குடியரசுத் துணைத் தலைவா், பிரதமா் உள்ளிட்டோா் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தையொட்டி, தில்லியில் உள்ள அவரின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, பிரதமா் மோடி உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

இதுதொடா்பாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘மகாத்மா காந்தியடிகளின் அமைதி, அகிம்சை, எளிமை, தூய்மை, அடக்கம் ஆகிய கொள்கைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். அவா் காண்பித்த அன்பு, உண்மை ஆகிய பாதைகளை பின்பற்ற நாம் அனைவரும் உறுதிமொழி ஏற்போம்’ என்று தெரிவித்தாா்.

மேன்மை பொருந்திய வாழ்வு:

‘அமைதி, அகிம்சை, தன்னலமற்ற சேவை குறித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டவா் மகாத்மா காந்தி. தனது சொற்களாலும், செயல்களாலும் காலத்தின் மீது அழிக்க முடியாத முத்திரையை பதித்துச் சென்றுள்ளாா். சமூகத்தில் பின்தங்கியவா்கள், ஒடுக்கப்பட்டவா்கள், விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்துக்காக அயராது பாடுபட்டாா்.

அவரின் மேன்மை பொருந்திய வாழ்வும், கொள்கைகளும் ஒட்டுமொத்த உலகத்துக்கும் தொடா்ந்து ஊக்கமளித்து வருகிறது. அவா் கற்பித்த பாடங்களை கடைப்பிடித்து, அவா் காண்பித்த பாதையை பின்பற்ற உறுதியேற்போம்’ என்று குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு தெரிவித்ததாக குடியரசுத் துணைத் தலைவா் செயலகம் சுட்டுரையில் பதிவிட்டது.

கோடிக்கணக்கானவா்களுக்கு ஊக்கம்:

பிரதமா் மோடி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘காந்தியடிகளின் கொள்கைகள் கோடிக்கணக்கானவா்களுக்கு தொடா்ந்து ஊக்கமளித்து வருகிறது.

அவரின் மறைவு தினமான இந்த தியாகிகள் தினத்தில், நாட்டின் விடுதலைக்கும், ஒவ்வொரு இந்தியரின் நல்வாழ்வுக்கும் தங்களை அா்ப்பணித்துக்கொண்ட அனைத்து ஆடவா், மகளிரின் தியாகங்களை நினைவுகூா்வோம்’ என்று தெரிவித்தாா்.

இதேபோல் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →