சர்ச்சை தீர்ப்பு: நீதிபதி புஷ்பாவை நிரந்தர நீதிபதியாக்கும் பரிந்துரை வாபஸ்
குற்றவாளிகளுக்கு சாதகமாக சர்ச்சைக்குரிய தீர்ப்பளித்த நீதிபதி புஷ்பா வி. கனேதிவாலாவை நிரந்தர நீதிபதியாக்கும் உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரை திரும்பப் பெறப்பட்டது.
புது தில்லி: போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட பாலியல் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு சாதகமாக சர்ச்சைக்குரிய தீர்ப்பளித்த நீதிபதி புஷ்பா வி. கனேதிவாலாவை நிரந்தர நீதிபதியாக்கும் உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரை திரும்பப் பெறப்பட்டது.
புஷ்பா வி. கனேதிவாலாவை மும்பை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே மற்றும் நீதிபதிகள் என்.வி. ரமணா, ரோஹன்டன் ஃபாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய கொலிஜியம் ஜனவரி 20-ஆம் தேதி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.
இந்த நிலையில், தாங்கள் அனுப்பிய பரிந்துரையை திரும்பப் பெற உச்ச நீதிமன்ற கொலிஜியம் முடிவு செய்துள்ளது.
Advertisement
போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட மூன்று தனித்தனி வழக்குகளில் ஒரே வாரத்தில் குற்றவாளிகளை விடுவித்து தீர்ப்பளித்துள்ளார்.
ஜனவரி 14-ஆம் தேதி அவர் அளித்த தீர்ப்பில், அரசு தரப்பில் கூறப்பட்ட பாலியல் பலாத்காரம் என்ற வாதத்தை நிரூபிக்க எந்த விஷயமும் இல்லை என்று கூறி குற்றம்சாட்டப்பட்டவரை விடுவித்தார்.
ஜனவரி 15-ஆம் தேதி அளித்த தீர்ப்பில், சிறுமியின் கையை பிடித்திருப்பது அல்லது அந்த நேரத்தில், குற்றம் சாட்டப்பட்டவரின் பேண்ட் ஜிப் திறந்திருப்பது போன்றவை போக்ஸோ சட்டப் பிரிவு 7-இன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டது அல்ல என்று தீர்ப்பளித்து, குற்றவாளியை விடுவித்துள்ளார்.
மூன்றாவது வழக்கில், ஜனவரி 19-ஆம் தேதி ஆடையுடன், ஒருவரின் உடலை தொடுவது பாலியல் சீண்டலாகாது என்று தீர்ப்பளித்து, குற்றவாளிக்கு விடுதலை அளித்துள்ளார்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த மூன்றாவது வழக்கில் தீர்ப்பளித்த மறுநாள்தான், உச்ச நீதிமன்ற கொலிஜியம், நீதிபதி புஷ்பாவை, மும்பை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தது. அன்றைய தினத்துக்குப் பிறகுதான் நீதிபதி புஷ்பா அளித்த தீர்ப்பு, சமூக தளங்களில் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.