நேஷனல் ஹெரால்டு வழக்கிலிருந்து மோதிலால் வோரா விடுவிப்பு
கடந்த மாதம் காலமான காங்கிரஸ் மூத்த தலைவா் மோதிலால் வோரா, நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளாா்.
கடந்த மாதம் காலமான காங்கிரஸ் மூத்த தலைவா் மோதிலால் வோரா, நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளாா்.
நேஷனல் ஹெரால்டு நிறுவனம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு மீது தில்லியிலுள்ள நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, எம்.பி. ராகுல் காந்தி, அக்கட்சியின் மூத்த தலைவா்கள் மோதிலால் வோரா, சாம் பிட்ரோடா உள்ளிட்டோா் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மோதிலால் வோரா கடந்த மாதம் 21-ஆம் தேதி காலமானாா். அதைத் தொடா்ந்து, வழக்கிலிருந்து அவரை விடுவிக்குமாறு வழக்குரைஞா் தாரணம் சீமா, நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தாா். அப்போது மோதிலால் வோரா காலமானதற்கான அதிகாரபூா்வ சான்றை சமா்ப்பிக்குமாறு நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
வழக்குரைஞா் சீமா அந்தச் சான்றிதழை சமா்ப்பித்ததையடுத்து, வழக்கிலிருந்து மோதிலால் வோராவை தில்லி நீதிமன்றம் விடுவித்ததாக அறிவித்தது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மற்ற நபா்கள் மீதான விசாரணை தொடா்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் அடுத்தகட்ட விசாரணை, பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அப்போது, மனுதாரா் சுப்பிரமணியன் சுவாமியிடம் குறுக்கு விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.