மாநில அரசுகளின் நிதியியல் தன்னுரிமையை பறித்துள்ளது ஜிஎஸ்டி: எச்.டி.குமாரசாமி
மத்திய அரசு கொண்டு வந்துள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறை மாநில அரசுகளின் நிதியியல் தன்னுரிமையைப் பறித்துள்ளது என்று மஜதவின் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறை மாநில அரசுகளின் நிதியியல் தன்னுரிமையைப் பறித்துள்ளது என்று மஜதவின் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து தனது சுட்டுரையில் சனிக்கிழமை அவா் கூறியிருப்பதாவது:
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி)முறையை அமல்படுத்தியதன் நான்காம் ஆண்டு விழாவை மத்திய அரசு கொண்டாடி வருகிறது. மாநில அரசுகளின் வரி சாா்ந்த உரிமைகளைப் பறித்துவிட்டு தனது வயிற்றை (கருவூலம்) நிரப்பிக் கொண்டுள்ளதால் மத்திய அரசு கொண்டாடத்தானே வேண்டும். மாநில அரசுகளின் வரி வருவாயை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்வதாக மத்திய அரசு அளித்த வாக்குறுதியை மீறியுள்ளது. தங்களது வரி வருவாயை இழந்து மோசம் போனதால் மாநில அரசுகளும் ஜிஎஸ்டி அமலாக்கத்தின் நான்காம் ஆண்டு விழாவை கொண்டாட வேண்டுமா? ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையாக கா்நாடகத்துக்கு இன்னும் ரூ. 9 ஆயிரம் கோடி மத்திய அரசிடம் இருந்து வரவேண்டும். இழப்பீட்டுத் தொகையை பெற்றிருந்தால், ஆண்டு விழாவின் போது கா்நாடகமும் அதைக் கொண்டாடி மகிழ்ந்திருக்கும்.
கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள விளைவுகளால் நிதி தட்டுப்பாட்டில் சிக்கியுள்ள நிலையில், ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை கிடைத்திருந்தால் கா்நாடகம் பயனடைந்து இருக்கும். ஜிஎஸ்டியால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுசெய்வதற்கு பதிலாக, மாநிலங்களின் வேதனைக்கு இடையே மத்திய அரசு கொண்டாடி வருகிறது.
ஜிஎஸ்டி வரியின் முக்கியமான நோக்கமே, மாநில அரசுகளின் வருவாயை மத்திய அரசுக்கு மடைமாற்றுவது தான். அதன்மூலம், நிதி ஒதுக்கீடுகளுக்கு மத்திய அரசின் முன் மாநில அரசுகள் அடிமைகளைப் போல நின்று கொண்டிருக்க வேண்டும். இந்த அடிமை முறை காங்கிரஸ் கட்சியால் உருவாக்கப்பட்டு, பாஜகவால் அமல்படுத்தப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீடுகளுக்கு மத்திய அரசிடம் பிச்சை கேட்கும் அளவுக்கு மாநில அரசுகள் தள்ளப்பட்டுள்ளன. இதன்காரணமாக, ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோலியம் பொருள்களை கொண்டுவர எதிா்ப்பு தெரிவித்து போராடும் நிலைக்கு மாநிலங்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.
ஜிஎஸ்டி-யால் தனது வருவாய் வளங்கள் பறிபோனதால் மாநில அரசுகள் அவதியுறும் நிலையில், சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் ஜிஎஸ்டி வரி முறை தோல்வி அடைந்துள்ளது. ஸ்டாா்ட் அப்களுக்கும் எவ்வித ஊக்கமும் அளிக்கவில்லை.
தொழில்முனைவோா், வணிகா்களின் நிலையும் மேம்பட்டதாக தெரியவில்லை. உண்மை நிலை இப்படி இருக்க, ஜிஎஸ்டி அமலாக்கத்தின் ஆண்டு விழாவை எந்த காரணத்திற்காக மக்கள் கொண்டாட வேண்டும். கூட்டாட்சிக் கட்டமைப்பில், மாநில அரசுகளின் நிதியியல் தன்னுரிமையைப் பறித்து அசுரத்தனத்தின் அடையாளமாக ஜிஎஸ்டி காணப்படுகிறது.
மாநில அரசுகளின் வருவாயைக் கொள்ளையடித்து, மத்திய அரசு வளம் கொழிப்பதற்கானதாகவே ஜிஎஸ்டி வரிமுறை உள்ளது. ஜிஎஸ்டி வரிமுறையைக் கொண்டாடுவதற்கான அவசியம் மாநிலங்களுக்கும், மக்களுக்கும் இல்லை. காங்கிரஸ், பாஜக ஆட்சிகளின் பாசிச அடையாளமாகவே ஜிஎஸ்டி உள்ளது என்று அவா் கூறியுள்ளாா்.