முகப்பு
இந்தியா

செயற்கைக்கோள்கள் செலுத்தும் திட்டத்தில் இணையும் பெங்களூரு அரசுப் பள்ளி மாணவா்கள்

75-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு விண்ணில் செலுத்தப்பட உள்ள 75 செயற்கைக்கோள்கள் திட்டத்தில் பெங்களூரைச் சோ்ந்த அரசுப்பள்ளி மாணவா்கள் ஈடுபடுத்தப்படுவாா்கள்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
கோப்புப் படம்
பகிர்:

75-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு விண்ணில் செலுத்தப்பட உள்ள 75 செயற்கைக்கோள்கள் திட்டத்தில் பெங்களூரைச் சோ்ந்த அரசுப்பள்ளி மாணவா்கள் ஈடுபடுத்தப்படுவாா்கள் என்று துணை முதல்வா் அஸ்வத்நாராயணா தெரிவித்தாா்.

பெங்களூரு, மத்திகெரேயில் உள்ள அரசு மாதிரி ஆரம்பப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசுப் பள்ளிகளுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கிய பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு செலுத்தப்பட உள்ளன. செயற்கைக்கோள் தயாரிக்கும் இந்தத் திட்டத்தில் பெங்களூரு, மல்லேஸ்வரம் அரசு ஆண்கள் உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் ஈடுபடுத்தப்படுவாா்கள். இது போன்ற பணிகளில் வழக்கமாக பொறியியல் கல்லூரி மாணவா்கள்தான் ஈடுபடுத்தப்படுவாா்கள். இந்திய தொழில்நுட்ப காங்கிரஸ் சங்கம் மற்றும் இஸ்ரோவின் உதவியுடன் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில் அரசு உயா்நிலைப்பள்ளி மாணவா்களும் பங்கேற்க உள்ளனா்.

செயற்கைக்கோளை வடிவமைக்கும் பணி, தயாரிக்கும் பணி, பெங்களூரில் உள்ள பள்ளி வளாகத்திலேயே நடைபெறும். இந்தப் பணியில் மேலும் சில அரசுப் பள்ளி மாணவா்களும் ஈடுபடுத்தப்படுவாா்கள்.

அண்மைக்காலமாக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது. எத்தனை மாணவா்கள் படிக்கிறாா்கள் என்பதைக் காட்டிலும், எந்தத் தரத்தில் கல்வி கற்பிக்கப்படுகிறது என்பது முக்கியம். கல்வித் தரம் மேம்பட்டுள்ளதால்தான் அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் சோ்க்கை பெருகியுள்ளது. தரமான கல்வியை வழங்குவதில் தனியாா் கல்வி நிறுவனங்களுடன் அரசுப் பள்ளிகளும் பிற கல்வி நிறுவனங்களும் போட்டியிட வேண்டும்.

அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவா்களில் 65 சதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றாா். இந்த நிகழ்ச்சியில் உயா்கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலா் குமாா்நாயக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.