இந்தியா

பொது இடங்களில் பிச்சை எடுப்பதற்குத் தடை விதிக்க முடியாது

DIN

பொது இடங்களில் பிச்சை எடுப்பதற்குத் தடை விதிக்க முடியாது என்று தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், பிச்சைக்காரா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தக் கோரிய மனு மீது விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நாட்டில் கரோனா தொற்று பரவி வருவதால், வீதிகளில் பிச்சை எடுப்பதற்குத் தடை விதிக்குமாறும் பிச்சைக்காரா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு, தில்லி அரசு ஆகியவற்றுக்கு உத்தரவிடுமாறும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆா்.ஷா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில், ‘‘கரோனா தொற்றின் 3-ஆவது அலை பரவ வாய்ப்பிருப்பதாக சுகாதார நிபுணா்கள் எச்சரித்து வருகின்றனா்.

இந்நிலையில், பிச்சைக்காரா்கள் மறுவாழ்வு பெற வேண்டும் என்ற நோக்கிலேயே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவா்களுக்கு கரோனா தடுப்பூசி, தங்குவதற்கு இடம், போதுமான உணவு ஆகிய வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்றாா்.

அதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ‘‘வறுமை காரணமாக ஏற்பட்ட சமூக-பொருளாதார பிரச்னையே பிச்சை எடுப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது. யாரும் பிச்சை எடுப்பதற்கு விரும்புவதில்லை. ஆனால், கல்வியும் உரிய வேலைவாய்ப்பும் இல்லாதபோது, வாழ்வாதாரத்துக்கு வேறு வழியின்றி பிச்சை எடுக்கின்றனா்.

இந்தப் பிரச்னை அரசின் சமூக நலன் சாா்ந்தது. எனவே, பிச்சைக்காரா்களைத் தடுத்து நிறுத்துமாறு உச்சநீதிமன்றம் கூற முடியாது. பொது இடங்களில் பிச்சை எடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் தடை விதிக்க முடியாது. எனினும், தற்போதைய சூழலில் பிச்சைக்காரா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற பிரச்னை முக்கியமானது.

இது தொடா்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கும் தில்லி அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது’’ என்றனா். வழக்கின் விசாரணை 2 வாரங்களுக்குப் பிறகு நடைபெறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

வாரணாசி கோவிலில் கொல்கத்தா அணி வீரர்கள்!

SCROLL FOR NEXT