இந்தியா

18 முதல் 44 வயதினருக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி: மத்திய அரசுக்கு ஜாா்க்கண்ட் முதல்வா் கோரிக்கை

DIN

18 முதல் 44 வயதுக்கு உள்பட்ட அனைவருக்கும் மத்திய அரசே இலவசமாக கரோனா தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு மாநில முதல்வா் ஹேமந்த் சோரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

நாட்டில் 45 வயதைக் கடந்தோருக்கு மத்திய அரசு சாா்பில் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 18 முதல் 44 வயதினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை மாநில அரசுகளிடம் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது. அதன்படி, மாநில அரசுகளே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து சம்பந்தப்பட்ட வயதினருக்கு செலுத்த வேண்டும்.

இதற்கு பல மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், பிரதமா் மோடிக்கு செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

மாநிலத்தில் 18 முதல் 44 வயதுக்கு உள்பட்டோரின் எண்ணிக்கை சுமாா் 1.57 கோடியாக உள்ளது. அவா்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டுமெனில் ரூ.1,100 கோடிக்கும் அதிகமாக செலவாகும்.

கரோனா தொற்று பரவல் காரணமாக மாநில அரசு ஏற்கெனவே நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இத்தகைய சூழலில் 18 முதல் 44 வயதினருக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது மாநில அரசின் நிதிச் சுமையை மேலும் அதிகரிக்கும்.

மேலும், 12 முதல் 18 வயதினருக்கான கரோனா தடுப்பூசியும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அவா்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்குக் கூடுதலாக ரூ.1,100 கோடி செலவாக வாய்ப்புள்ளது. மாநில அரசின் நிதியாதாரத்தைக் கொண்டு அவ்வளவு தொகையை செலவிட முடியாத சூழல் உருவாகும்.

இத்தகைய இக்கட்டான சூழலில், கரோனா தடுப்பூசிகளை மாநில அரசுகளே கொள்முதல் செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக உள்ளது. அப்படியிருந்தும் கரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு முன்னெடுத்து வருகிறது.

எனினும், தடுப்பூசி நிறுவனங்கள் மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை இன்னும் வழங்கவில்லை. அதன் காரணமாக, 18 முதல் 44 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொய்வடைந்துள்ளன. அவற்றைக் கருத்தில் கொண்டு, 18 முதல் 44 வயதினருக்கு மத்திய அரசே இலவசமாக கரோனா தடுப்பூசியை செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடகரை ஆதிதிராவிடா் நல அரசு ஆண்கள் பள்ளி மாணவா்கள் சாதனை

தடையில்லா மின் விநியோகம்: தலைமைச் செயலா் உத்தரவு

வணிகா் சங்கம் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

ராணிப்பேட்டையில் 92.28% தோ்ச்சி

மதிமுக 31-ஆவது ஆண்டு தொடக்க விழா

SCROLL FOR NEXT