முகப்பு
இந்தியா

20 நாள்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி: சோகத்தில் மூழ்கிய உ.பி. கிராமம்

உத்திரப்பிரதேச மாநிலம் லக்னௌவில், கடந்த 20 நாள்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலியான நிலையில் இமாலியா கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Updated On : 2 ஜூன், 2021 at 2:06 PM
20 நாள்களில் ஒரே குடும்பத்தில் 8 பேர் பலி: சோகத்தில் மூழ்கிய உ.பி. கிராமம்
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:51 AM


லக்னௌ: உத்திரப்பிரதேச மாநிலம் லக்னௌவில், கடந்த 20 நாள்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலியான நிலையில் இமாலியா கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

ஏப்ரல் 25 முதல் மே 15-ஆம் தேதிக்குள் அதாவது 20 நாள்களில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கரோனா பாதித்து ஒருவர் பின் ஒருவராக மரணமடைந்துள்ளனர். இந்த துக்கத்தைத் தாள முடியாத 8வது நபர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சகோதரர்களும் அடங்குவர்.

Advertisement

அந்தக் குடும்பத்தில் தற்போது உயிரோடு இருக்கும் குடும்பத் தலைவர் ஓம்கார் யாதவ் இது பற்றி கூறுகையில், எனது நான்கு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள், ஒரு தாய் என ஏழு பேரும் கரோனா பாதித்து உயிரிழந்துவிட்டனர். இதைத் தாங்கிக் கொள்ள முடியாத எனது சித்தியும்  மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார்.

ஒரே நாளில் காலையில் எனது தாய்க்கும், மதியம் எனது 3 சகோதரர்களுக்கும் இறுதிச் சடங்கினை செய்தேன். அடுத்தடுத்த நாள்களில் எனது இரண்டு சகோதரிகளும், இளைய சகோதரரும் உயிரிழந்துவிட்டனர்.

ஒவ்வொருவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அங்கு சிகிச்சை கிடைக்காமல் மரணமடைந்துவிட்டனர். ஒரே குடும்பத்தில் 7 பேர் கரோனாவுக்கு பலியாகியும், அரசு தரப்பில் யாருமே இந்த கிராமத்துக்கு வரவில்லை என்கிறார் கிராமத் தலைவர். தூய்மைப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, தங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக மாயமாக மறைந்துவிடுவது ஏன் என்று கூடத் தெரியாமல் தவித்து வருகிறார்கள்.  உடல்கள் இங்கு வரும்போது, அவர்களை பக்கத்து வீட்டுக்கு அனுப்பிவிடுவோம். இன்னமும் அவர்கள் எல்லாம் விரைவில் வீட்டுக்கு வருவார்கள் என்றுதான் குழந்தைகள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று குடும்ப உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.

பெற்றோரை இழந்த இந்தக் குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும் என்ற கவலையையும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். அரசு சார்பில் ஏதேனும் உதவி கிட்டுமா என்பது கூட எங்களுக்குத் தெரியவில்லை என்கிறார்கள் கவலையோடு.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.