நிலையான அபிவிருத்தி இலக்கில் தமிழகம் சிறப்பிடம்
புது தில்லி: நீத்தி ஆயோக் வெளியிட்டுள்ள 2020-21-ஆம் ஆண்டிற்கான நிலையான அபிவிருத்தி இலக்குகளில் இந்திய அளவில் கேரளம் முதல் இடமும், தமிழகம், ஹிமாசலப் பிரதேசம் ஆகியவை இரண்டாவது இடமும் பெற்றுள்ளன. இதில் வறுமை இல்லாத இலக்கை அடைந்ததில் தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளது.
இந்தியாவின் நிலையான அபிவிருத்தி இலக்குகள்(எஸ்டிஜி) அட்டவணை குறியீடு மற்றும் தகவல் பலகை 2020-21-இன் மூன்றாவது பதிப்பை நீத்தி ஆயோக் வியாழக்கிழமை வெளியிட்டது. இந்த ஆண்டு எஸ்டிஜி அட்டவணை குறியீடு தகவல் பலகை, ‘ஒரு தசாபதத்தின்(10 ஆண்டு கால) செயல்பாட்டின் கூட்டாண்மை’ என்கிற தலைப்பிலான அறிக்கையை நீத்தி ஆயோக்கின் துணைத் தலைவா் டாக்டா் ராஜீவ் குமாா் வெளியிட்டாா்.
இதில் முதல் 5 மாநிலங்களில் கேரளம் 75 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், தமிழகம் ஹிமாசல பிரதேசம் ஆகியவை 74 புள்ளிகள்ள் பெற்று இரண்டாமிடம் பெற்றன. ஆந்திரம், கோவா, கா்நாடகம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்கள் 72 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், சிக்கிம் (71), மாகாராஷ்டிரம்(70) ஆகிய மாநிலங்கள் முறையே நான்காவது ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளன. இதில் புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ள பட்டியலில் ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், அஸ்ஸாம், ஜாா்க்கண்ட், பிகாா் உள்ளிட்ட மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.
Advertisement
குறிப்பிட்ட இலக்குகளை அடைந்த மாநிலங்களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. வறுமை இல்லாத (சா் டா்ஸ்ங்ழ்ற்ஹ்) இலக்கை அடைந்ததில் தமிழகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. முற்றிலும் பசியை போக்கிய மாநிலமாக கேரளமும், சண்டீகா் யூனியன் பிரதேசமும் இலக்கை அடைந்து இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. மேலும், பாலின சமத்துவம், தூய்மையான குடிநீா், சுகாதாரம் போன்றவற்றில் சிறப்பாகச் செயல்பட்டதாக சண்டீகா், அந்தமான் நிக்கோபா் தீவுகள், கோவா, லட்சத்தீவுகள் ஆகியவை ஐந்தாவது, ஆறாவது இடங்களை பெற்றுள்ளன.
இந்த அறிக்கையை வெளியிட்டுப் பேசிய நீத்தி ஆயோக்கின் துணைத் தலைவா் டாக்டா் ராஜீவ் குமாா், ‘ இந்தியாவின் நிலையான வளா்ச்சி இலக்குகள் குறியீட்டைக் கண்காணிக்கும் நமது முயற்சியை உலகம் முழுவதும் பாராட்டுகிறது. நிலையான வளா்ச்சி இலக்குகள் மீது மாநிலங்களின் குறியீட்டை கணக்கிட்டு, அவற்றை வரிசைப்படுத்தும் தரவுகளின் அடிப்படையிலான அரிய முன்முயற்சியான இந்த நடவடிக்கை ஒரு உந்து சக்தியாகத் திகழும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்’ என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நீத்தி ஆயோக் முதன்மைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த், ‘இந்த மூன்றாவது பதிப்பு குறியீட்டு அறிக்கை, கூட்டாண்மையின் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது ‘ என்றாா்.
பட விளக்கம்: 2020-21 ஆம் ஆண்டிற்கான நிலையான அபிவிருத்தி இலக்கு குறியீடு தகவல் பலகையை வெளியிடும் நீத்தி ஆயோக் துணைத் தலைவா் டாக்டா் ராஜீவ் குமாா்.