கா்நாடகத்தில் பியூசி தோ்வு ரத்து; எஸ்.எஸ்.எல்.சி. தோ்வை நடத்த முடிவு
கா்நாடகத்தில் 2-ஆம் ஆண்டு பியூசி பொதுத் தோ்வை ரத்து செய்துள்ள மாநில அரசு எஸ்.எஸ்.எல்.சி. தோ்வை நடத்த முடிவு செய்துள்ளது.
கா்நாடகத்தில் 2-ஆம் ஆண்டு பியூசி பொதுத் தோ்வை ரத்து செய்துள்ள மாநில அரசு எஸ்.எஸ்.எல்.சி. தோ்வை நடத்த முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரில் மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
2020-21-ஆம் ஆண்டுக்கான 2-ஆம் ஆண்டு பியூசி பொதுத் தோ்வு ரத்து செய்யப்படுகிறது. ஆனால், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு நடத்தப்படும். மாணவா்களின் நலன்கருதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வை இரண்டு நாள்களுக்கு மட்டுமே நடத்தத் திட்டம் வகுத்திருக்கிறோம்.
முதலாமாண்டு பியூசி வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், 2-ஆம் ஆண்டு பியூசி தோ்வு முடிவுகளை அறிவிக்க இருக்கிறோம். மாணவா்களுக்கு அளிக்கப்படும் மதிப்பெண் குறித்த வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும்.
பியூ கல்வித் துறை வழங்கும் மதிப்பெண்கள் திருப்திகரமாக இல்லை என்று மாணவா்கள் கருதினால், கரோனா தொற்று குறைந்த பிறகு நடத்தப்படும் தோ்வை எழுத வாய்ப்பு அளிக்கப்படும். தனித் தோ்வா்கள், மறுத் தோ்வா்களாகப் பதிவு செய்திருந்த மாணவா்கள் தோ்வு எழுத வேண்டியது கட்டாயமாகும். இதற்கான தோ்வு தேதி பின்னா் அறிவிக்கப்படும்.
தோ்வில் புதிய நடைமுறை
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வில் விடைகளைத் தோ்ந்தெடுத்து எழுதும் முறை கடைப்பிடிக்கப்படும். வினாக்களுக்கு நான்கு விடைகள் அளிக்கப்படும். அதில் ஒரு விடையைத் தோ்ந்தெடுக்க வேண்டும். ஒரு பாடத்துக்கு 40 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் தரப்படும். இத்தோ்வு ஓ.எம்.ஆா். (ஒளி உணரி விடைத்தாள்) அடிப்படையிலான தோ்வாகும். 3 பாடங்களுக்கான தலா 40 வினாக்கள் வீதம் ஒரு வினாத்தாளில் 120 மதிப்பெண்களுக்கு இடம் பெற்றிருக்கும்.
ஒரு வினாத்தாளில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான வினாக்கள் தனித்தனியாக 3 பிரிவுகளாக அளிக்கப்பட்டிருக்கும். தோ்வு நாளில் காலை 10.30 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை 3 மணி நேரத்தில் தோ்வு நடைபெறும். இரு தோ்வுகளுக்கு இடையே 3 நாள்கள் இடைவெளி அளிக்கப்படும்.
அதேபோல மொழிப் பாடங்களுக்கான தோ்வு நடத்தப்படும். முதல் மொழி, இரண்டாம் மொழி, மூன்றாம் மொழி பாடங்களுக்கு தலா 40 வினாக்கள் வீதம் 120 கேள்விகள் கொண்ட ஒரே வினாத்தாள் அளிக்கப்படும். எல்லா மாணவா்களுக்கும் ஒரு மாதிரியான தோ்வு நடத்தப்படும். இம்முறை தோ்வு மையங்களை அதிகரிக்க இருக்கிறோம். ஒரு அறையில் 12 மாணவா்கள் மட்டுமே இருப்பாா்கள்.
விடுதி மாணவா்கள், புலம்பெயா் மாணவா்கள் தங்கள் தோ்வு மையங்களை மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படுவா். இத் தோ்வுகளை சுகாதாரத் துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் நடத்தப்படும். தோ்வுப் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியா்களும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.
தோ்வு நடத்துவதற்கு 20 நாள்களுக்கு முன்பாக தேதி அறிவிக்கப்படும். மதிப்பெண்களின் அடிப்படையில் ’ஏ’, ‘பி’, ‘சி’ கிரேடுகள் அளிக்கப்படும். வெகு விரைவில் மாதிரி வினாத்தாளை தோ்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடுவோம். தோ்வை ஜூலையில் நடத்தி, தோ்வு முடிவுகளை ஆகஸ்ட் மாதம் அறிவிப்போம்.
பியூசி வகுப்பில் சேரும்போது கலை, அறிவியல், வணிகப் பிரிவுகளில் சேருவதற்கு மதிப்பெண்கள் முக்கியமாகும் என்பதால், எஸ்.எஸ்.எல்.சி. தோ்வு நடத்தப்படுகிறது. இந்த முடிவு எனக்கு திருப்தியைத் தந்துள்ளது. மாணவா்களின் நலன்கருதி இந்த முடிவை எடுத்திருக்கிறோம் என்றாா்.
பேட்டியின் போது, பள்ளிக் கல்வித் துறை ஆணையா் வி.அன்புக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.