தில்லி எய்ம்ஸில் குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிசோதனை தொடக்கம்
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 2 முதல் 18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான கரோனா தடுப்பூசி பரிசோதனை இன்று தொடங்கியது.
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 2 முதல் 18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான கரோனா தடுப்பூசி பரிசோதனை இன்று தொடங்கியது.
இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படுகிறது. பரிசோதனைக்கு தேர்வானர்களுக்கு முழு பரிசோதனை நடத்தப்பட்டு, முடிவு வந்ததும் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று எய்ம்ஸ் பேராசிரியர் மருத்துவர் சஞ்சய் ராய் தெரிவித்துள்ளார். இதற்காக 525 ஆரோக்கியமான தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்திருக்கும் கரோனா தடுப்பூசி குழந்தைகளுக்கு பொருந்துகிறதா என்று பரிசோதிக்கும் சோதனை ஏற்கனவே பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடங்கிவிட்டது.
Advertisement
நாட்டில் கரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், மூன்றாம் அலைக்கும் வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்று எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி பரிசோதனைகள் தொடங்கியுள்ளன. பாட்னாவின் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி பரிசோதனையை கடந்த வாரம் தொடங்கியது. முதற்கட்டமாக 12-18 வயதினருக்கு சோதனைகளைத் தொடங்கியுள்ளது. இந்த சோதனைக்குப் பின்னர் 6-12, 2-6 வயதினருக்கு சோதனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கரோனா தடுப்பூசி பரிசோதனை இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக கோவாக்சின் தடுப்பூசி குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படுகிறது.
முன்னதாக பாரத் பயோடெக்கின் கரோனா தடுப்பூசியான கோவக்சினை குழந்தைகளுக்கு பரிசோதிக்க கடந்த மே 12 ஆம் தேதி இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.