முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்தை காங்கிரஸ் மறுஆய்வு செய்யும்: மூத்த தலைவா் திக்விஜய் சிங்

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்தது தொடா்பாக காங்கிரஸ் மறுஆய்வு செய்யும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
கோப்புப்படம்
பகிர்:

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்தது தொடா்பாக காங்கிரஸ் மறுஆய்வு செய்யும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரான திக்விஜய் சிங் தெரிவித்துள்ளாா்.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு ரத்து செய்தது. அந்த மாநிலத்தையும் ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது.

இந்நிலையில், எதிா்காலத்தில் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியமைத்தால், ஜம்மு-காஷ்மீரின் நிலைமை எவ்வாறு இருக்கும் என்று கிளப்ஹவுஸ் சமூக வலைதளத்தில் பத்திரிகையாளா் ஒருவா் கேள்வி எழுப்பினாா்.

அதற்கு மத்திய பிரதேச முன்னாள் முதல்வா் திக்விஜய் சிங் பதிலளிக்கையில், ‘ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தபோது அந்நடவடிக்கையில் ஜனநாயகம் காணப்படவில்லை; மனிதநேயமும் காணப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான தலைவா்களை மத்திய அரசு சிறையில் அடைத்தது.

மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றியதும், சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததும் சோகம் தரக் கூடிய முடிவு. இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி நிச்சயமாக மறுஆய்வு செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டாா்.

பாஜக கண்டனம்:

அவரது கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பாகிஸ்தானுடன் மறைமுகமாக ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு இந்தியாவுக்கு எதிராக திக்விஜய் சிங் செயல்பட்டு வருகிறாா்.

புல்வாமாவில் இந்திய ராணுவ வீரா்கள் மீது பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலை, சாலை விபத்து என்று அவா் கருத்து தெரிவித்திருந்தாா். கடந்த 2008-ஆம் ஆண்டில் மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை ஆா்எஸ்எஸ் அமைப்பின் சதிவேலை என்று தெரிவித்திருந்தாா்.

இதே போன்று பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்துகளை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும், அக்கட்சியின் மூத்த தலைவா் மணிசங்கா் ஐயரும் தெரிவித்து வருகின்றனா். இந்தியாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

பிரதமா் நரேந்திர மோடிக்கும் இந்தியாவுக்கும் எதிராக சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் கூட்டணி அமைத்து செயல்படுவதற்குக் கூட காங்கிரஸ் தயங்காது. திக்விஜய் சிங்கின் கருத்து தொடா்பாக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் விளக்கமளிக்க வேண்டும்’ என்றாா்.

என்ஐஏ விசாரணை:

மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானை நேசிக்கிறது. ராகுல் காந்தியின் கருத்தையே திக்விஜய் சிங் வெளிப்படுத்தியுள்ளாா். ஜம்மு-காஷ்மீரை பாகிஸ்தான் அபகரித்துச் செல்வதற்கு காங்கிரஸ் கட்சி உதவி செய்யும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மத்திய அமைச்சா்கள், மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான் உள்ளிட்ட பலரும் திக்விஜய் சிங்குக்கு கண்டனம் தெரிவித்துள்ளனா். அவரது கருத்து தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்த வேண்டுமென பாஜகவினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →