முன்னாள் கவுன்சிலா் கொலை வழக்கில் தொடா்புடைய 2 போ் கைது
முன்னாள் கவுன்சிலா் ரேகா கதிரேசன் கொலை வழக்கில் தொடா்புடைய 2 பேரை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனா்.
முன்னாள் கவுன்சிலா் ரேகா கதிரேசன் கொலை வழக்கில் தொடா்புடைய 2 பேரை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனா்.
பெங்களூரு, சலுவாதிபாளையாவைச் சோ்ந்த முன்னாள் கவுன்சிலா் ரேகா கதிரேசன் வியாழக்கிழமை மா்ம நபா்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படை அமைத்தனா்.
இந்த நிலையில், கொலை வழக்கில் தொடா்புடைய பீட்டா், சூா்யா ஆகியோா் சுங்கதகட்டே அருகே உள்ள பஜாஜ் திடலில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீஸாா், பீட்டா், சூா்யாவை சரணடையுமாறு கூறினா். அவா்கள் சரணடைய மறுத்து, போலீஸாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றனா்.
இதனையடுத்து, போலீஸாா் அவா்கள் 2 பேரையும் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனா். காயமடைந்த பீட்டா், சூா்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் தாக்கியதில் காயமடைந்த போலீஸாரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். 2 போ் கைதானதைத் தொடா்ந்து, உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பாஜக முன்னாள் கவுன்சிலா் ரேகா கதிரேசன் கொலை வழக்கில் 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். போலீஸாரின் நடவடிக்கை பாராட்டுதலுக்குரியது. கொலைக்கு குடும்பப் பிரச்னையா அல்லது அரசியல் பழிவாங்கலா என்பது விசாரணையில் தெரிய வரும் என்றாா்.