தில்லியில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முதியவர்கள் ஆர்வம்
நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் நீரிழிவு உள்ளிட்ட நோய் பாதித்த 45 - 59 வயதுடையவர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் நாடு முழுவதும் இன்று தொடங்கியது.
நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் நீரிழிவு உள்ளிட்ட நோய் பாதித்த 45 - 59 வயதுடையவர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் நாடு முழுவதும் இன்று தொடங்கியது.
இதையடுத்து, புது தில்லியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் மருத்துவமனைகளில் இன்று காலை முதலே ஏராளமான முதியவர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைக் காண முடிந்தது.
அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டாலும், தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புது தில்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசிக்கு ரூ.250 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காலை முதலே ஏராளமான முதியவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முதல் கட்ட கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
இது குறித்து கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 95 வயது மூதாட்டி ராதா ராணி கூறுகையில், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு முற்றிலும் இயல்பாகவே இருக்கிறேன். எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறித்து எனக்கு எந்த பயமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.