மும்பையில் புதிய கரோனா நோயாளிகளில் 90% பேர் பணக்காரர்களாம்! அதிர்ச்சித் தகவல்
மும்பையில் 2021-ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 90% பேர் பணக்காரர்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மும்பை: மும்பையில் 2021-ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 90% பேர் பணக்காரர்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
எதன் அடிப்படையில் இவ்வாறு சொல்லப்படுகிறது என்ற சந்தேகம் எழலாம். விளக்கம் இருக்கிறது. அதாவது, மும்பையில் ஓங்கி உயர்ந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளைச் சேர்ந்த ஏராளமானோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதுதான் அவ்வாறு கூறக் காரணம்.
மும்பை மாநகராட்சி வெளியிட்டிருக்கும் கரோனா புள்ளி விவரத்தின் அடிப்படையில், தெற்கு மும்பையின் அந்தேரி கிழக்கு மற்றும் மேற்கு, முலுந்த் மற்றும் பெட்டர் சாலை மற்றும் மலபார் ஹில் பகுதியில் உள்ள மிகப்பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளைச் சேர்ந்த ஏராளமானோருக்கு கரோனா பாதித்துள்ளது.
அதாவது, கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரியில் மட்டும் கரோனா உறுதி செய்யப்பட்ட 23,002 பேரில் வெறும் 10 சதவீதம் பேர்தான் குடிசை மற்றும் நடுத்தர, ஏழை மக்கள். ஆனால் மார்ச் மாதத்தில் குடிசைப் பகுதிகளிலும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
மும்பையில் மார்ச் 1ம் தேதி நிலவரப்படி 10 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருந்தன. 137 கட்டடங்கள் கரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டதால் சீல் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவே மார்ச் 10-ம் தேதி 27 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாகவும், 228 கட்டடங்களாகவும் உயர்ந்துள்ளது.
கரோனா தொற்றுப் பரவல் குறித்த அலட்சியப் போக்கு அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.