நாசிக் சந்தைகளில் நுழைவுக் கட்டணம்: கூட்டத்தைக் குறைக்க புதிய வழி
கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் காய்கறி உள்ளிட்ட சந்தைகளில் மக்கள் கூட்டம் அதிகமாகக் கூடுவதைத் தடுக்கும் வகையில் புதிய வழி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாசிக்: கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் காய்கறி உள்ளிட்ட சந்தைகளில் மக்கள் கூட்டம் அதிகமாகக் கூடுவதைத் தடுக்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது, நாசிக்கில் உள்ள எந்த ஒரு சந்தைக்கும் செல்ல பொதுமக்களிடமிருந்து ரூ.5 நுழைவுக் கட்டணமாக வசூலிக்க காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சந்தைகளுக்கு வரும் மக்கள் கூட்டத்தைக் குறைக்க இந்த வழிமுறை பின்பற்றப்படும் என்றும், அவ்வாறு ரூ.5 செலுத்தி சந்தைக்குள் நுழைவோர், ஒரு மணி நேரத்துக்குள் திரும்பிவிட வேண்டும், இல்லாவிட்டால் ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நாசிக் நகராட்சியால் வசூலிக்கப்படும் இந்த தொகை, சந்தைப் பகுதிகளை கிருமிநாசினியால் தூய்மைப்படுத்துவது உள்ளிட்டப் பணிகளுக்கு செலவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.