முகப்பு
இந்தியா

கரோனா எதிரொலி: பரோல், ஜாமீன் வழங்கப்பட்ட அனைத்துக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

கரோனா பரவல் அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு சிறைகளில் நெரிசலை குறைக்கும்விதமாக பரோல் மற்றும் ஜாமீன் வழங்கப்பட்ட அனைத்துக் கைதிகளையும் விரைவாக விடுவிக்குமாறு உத்தரவு

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

கரோனா பரவல் அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு சிறைகளில் நெரிசலை குறைக்கும்விதமாக பரோல் மற்றும் ஜாமீன் வழங்கப்பட்ட அனைத்துக் கைதிகளையும் விரைவாக விடுவிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவில் உயா்ந்து வருவதைக் கருத்தில்கொண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், சூா்ய காந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. உச்சநீதிமன்ற வலைதளத்தில் சனிக்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள உயா் அதிகார குழுக்களின் (ஹெச்.பி.சி.) பரிந்துரையின் அடிப்படையில் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் ஜாமீன் வழங்கப்பட்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட கைதிகள் அனைவருக்கும், தேவையற்ற தாமதத்தைத் தவிா்க்கும்விதமாக ஹெச்பிசி குழுக்களின் மறுபரிசீலனை இல்லாமலே அவா்களுக்கு மீண்டும் அதே ஜாமீன் வழங்கப்படுகிறது.

அதுபோல, உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளின் அடிப்படையில் ஏற்கெனவே பரோலில் விடுவிக்கப்பட்ட கைதிகளுக்கு, சிறைகளில் கரோனா பரவல் அபாயத்தை குறைக்கும்விதமாக மீண்டும் கூடுதலாக 90 நாள்களுக்கு பரோல் வழங்கப்பட வேண்டும்.

வரதட்சிணை கொடுமை (சட்டப் பிரிவு 498ஏ) என்பன உள்ளிட்ட வழக்குகளில் அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நபா்களை இயந்திரத்தனமாக கைது செய்வதை அதிகாரிகள் தவிா்க்க வேண்டும்.

மேலும், புதிய கைதிகளை தேசிய சட்ட உதவிகள் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் விடுவிப்பது குறித்து ஹெச்பிசி குழுக்கள் பரிசீலிக்க வேண்டும்.

சிறைகளை தொடா்ந்து தூய்மையாக வைத்திருப்பதோடு, அனைத்துக் கைதிகளுக்கும் உரிய மருத்துவ வசதிகள் கிடைப்பதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →