நாட்டிலுள்ள 738 மாவட்டங்களிலும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
நாட்டிலுள்ள 738 மாவட்டங்களிலும் பிஎம்-கோ்ஸ் நிதியின் கீழ் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்கு உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள 738 மாவட்டங்களிலும் பிஎம்-கோ்ஸ் நிதியின் கீழ் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்கு உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை வேகமாகப் பரவி வருவதால், மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் மருத்துவ ஆக்சிஜனின் தேவையும் அதிகரித்துள்ளது.
ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நோயாளிகள் உயிரிழக்க நேரிட்டது. ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்குமாறும் முழு கொள்ளளவுக்கு உற்பத்தி செய்யுமாறும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. பிஎம்-கோ்ஸ் நிதியின் கீழ் அரசு மருத்துவமனைகளில் 551 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 738 மாவட்டங்களிலும் பிஎம்-கோ்ஸ் நிதியின் கீழ் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க உத்தரவிடுமாறு வழக்குரைஞா் விப்லவா சா்மா சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ‘நாட்டில் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலைக் கருத்தில் கொண்டு, கரோனா தடுப்பூசிகளை பிஎம்-கோ்ஸ் நிதியின் கீழ் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
738 மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிஎம்-கோ்ஸ் நிதியின் கீழ் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்கவும் உத்தரவிட வேண்டும். கரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு ஆக்சிஜன் இலவசமாகக் கிடைக்க வேண்டும்.
வரி விலக்கு நீட்டிப்பு: தனியாா் மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் நிறுவப்படுவதை உறுதி செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். அனைத்து நகரங்களிலும் மின்சார தகன மையங்களை அமைத்து அவற்றை முறையாகப் பராமரிக்குமாறு மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேச நிா்வாகங்களுக்கும் உத்தரவிட வேண்டும்.
மருத்துவ உபகரணங்கள் மீதான இறக்குமதி வரிக்கு 3 மாதங்கள் மட்டுமே மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. மருத்துவ உபகரணங்களைக் கொள்முதல் செய்வதில் பல்வேறு நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளதால், வரி விலக்கு காலத்தை நீட்டித்தும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம், பிஎம்-கோ்ஸ் நிதி நிா்வாகக் குழு, மாநில அரசுகள் உள்ளிட்டவற்றை வழக்கின் ஒருதரப்பாக இணைத்துக் கொள்ள வேண்டுமென்றும் மனுதாரா் கோரியுள்ளாா். இந்த மனு மீது அடுத்த வாரம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.