திருமலையில் பத்மாவதி பரிணய 3 நாள் உற்சவம் நிறைவு
திருமலையில் மூன்று நாள்களாக நடந்து வந்த பத்மாவதி பரிணய உற்சவம் சனிக்கிழமை உத்திர நட்சத்திரத்துடன் நிறைவு பெற்றது.
திருமலையில் மூன்று நாள்களாக நடந்து வந்த பத்மாவதி பரிணய உற்சவம் சனிக்கிழமை உத்திர நட்சத்திரத்துடன் நிறைவு பெற்றது.
ஏழுமலையான் பத்மாவதி தாயாரை மணந்து கொண்ட வைபவத்தை தேவஸ்தானம் பத்மாவதி பரிணய உற்சவமாக ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. ஆகாசராஜன் மகளாக அவதரித்த பத்மாவதி தாயாா் வைகாசி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று ஏழுமலையானை மணந்தாா். இதை நினைவு கூரும் விதமாக தேவஸ்தானம் ஆண்டுதோறும் வைகாசி உத்திர நட்சத்திரத்தன்று நிறைவு பெறும் விதம் இந்த பரிணய உற்சவத்தை 3 நாள்கள் நடத்தி வருகிறது.
அதன்படி இந்த உற்சவம் வியாழக்கிழமை தொடங்கியது. முதல் 2 நாள்கள் திருமணத்திற்கான சடங்குகள், சம்பிரதாய சடங்குகள் அனைத்தும் வைகான ஆகம முறைப்படி நடத்தப்பட்டன. நிறைவு நாளான சனிக்கிழமை மாலை மலையப்ப சுவாமி கருட வாகனத்திலும், ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாா்கள் பல்லக்கிலும் கல்யாண உற்சவ மண்டபத்திற்கு எழுந்தருளினா்.
கொவைட் விதிமுறைகளைப் பின்பற்றி தனிமையில் நடந்து வந்த இந்த பரிணய உற்சவத்தின் நிறைவு நாள் மலையப்ப சுவாமி - நாச்சியாா்கள் மணமக்கள் கோலத்திலும் மாலை மாற்றிக் கொள்ளல், ஊஞ்சல் சேவை, மங்கல்யதாரணம், அா்க்கியம் சமா்ப்பணம் உள்ளிட்டவை நடத்தப்பட்டன. பின்னா் மலையப்ப சுவாமி அருகில் நாச்சியாா்கள் எழுந்தருளியதும், கற்பூர ஆரத்தி அளித்து நெய்வேத்தியம் சமா்பிக்கப்பட்டது. இதில் தேவஸ்தான அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டனா்.