பஞ்சாப் & சிந்து காலாண்டு நிகர லாபம் ரூ.160 கோடி
அரசு வங்கியான பஞ்சாப் & சிந்து வங்கி 2020-2021 நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் நிகர லாபமாக ரூ.160.79 கோடி ஈட்டியுள்ளதாகத் தெரிவித்தது.
அரசு வங்கியான பஞ்சாப் & சிந்து வங்கி 2020-2021 நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் நிகர லாபமாக ரூ.160.79 கோடி ஈட்டியுள்ளதாகத் தெரிவித்தது.
இது தொடா்பாக அந்த வங்கி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
கடந்த 2020-2021 நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் வங்கி பெற்ற மொத்த வருவாய் ரூ. 1,940.62 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாயான ரூ. 2,289.43 கோடியைவிட 15.2 சதவீதம் குறைவாகும். வாராக் கடன் இடா்ப்பாடு, அவசரத் தேவைக்காக ஒதுக்கிய தொகை முந்தைய ஆண்டைவிட குறைந்து ரூ.4.38 கோடியாக உள்ளது. முந்தைய நிதியாண்டின் நான்காம் காலாண்டில் வாராக் கடன் இடா்ப்பாட்டை எதிா்கொள்ள ஒதுக்கிய தொகை ரூ.817.83 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2020-2021 நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் நிகர லாபமாக ரூ.160.79 கோடி ஈட்டியுள்ளது வங்கி. முந்தைய நிதியாண்டில் இதே கால அளவில் வங்கியின் இழப்பு ரூ.236.30 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
முழு நிதியாண்டில் வங்கியின் வருவாய் ரூ.7,876.72 கோடியாகும். முந்தைய 2019-2020 நிதியாண்டில் பெற்ற மொத்த வருவாயான ரூ.8,826.92 கோடியைக் காட்டிலும் இது 10.7 சதவீதம் குறைவாகும்.
முழு நிதி ஆண்டில் மொத்த வாராக் கடன் விகிதம் 13.76 சதவீதமாக இருந்தது. இதன் மதிப்பு ரூ.9,334 கோடியாகும். நிகர வாராக் கடன் அளவு, முந்தைய 2019-2020 நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் பாதியாகக் குறைந்து அதன் மதிப்பு ரூ. 2,461.95 கோடியாக இருந்தது என்று அந்த வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருக்கிறது.