கருப்பு பூஞ்சைக்கு இதுவும் ஒரு காரணம்: கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் விளக்கம்
கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையின் முதல் வாரத்திலேயே ஸ்டிராஸ்டைப் பயன்படுத்தியது கருப்பு பூஞ்சைத் தொற்றுக்கு ஒரு காரணம் என கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் கே. சுதாகர் புதன்கிழமை தெரிவித்தார்
கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையின் முதல் வாரத்திலேயே ஸ்டிராஸ்டைப் பயன்படுத்தியது கருப்பு பூஞ்சைத் தொற்றுக்கு ஒரு காரணம் என கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் கே. சுதாகர் புதன்கிழமை தெரிவித்தார்.
இதுபற்றி அவர் மேலும் தெரிவித்தது:
"கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்த ஒரு வாரத்துக்குப் பிறகு கரோனாவுக்குப் பிந்தைய பிரச்னைகளுக்கான வார்டில் குணமடைந்தவர்கள் பரிசோதித்துக்கொள்ள வேண்டும் அல்லது இணைய வழியில் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கு பூஞ்சைத் தொற்றுக்கான அறிகுறிகள் ஏதேனும் இருக்கிறதா என்பதைக் கண்டறிய அவர்கள் தொடர்பு கொள்ளப்படுவார்கள். அறிகுறிகள் இருக்கும்பட்சத்தில் அவர்கள் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பும்போதும் கரோனா நோயாளிகளுக்கு ஏதேனும் பூஞ்சைத் தொற்று இருக்கிறதா என்பது பரிசோதிக்கப்படும். தேவைப்பட்டால் எம்ஆர்ஐ ஸ்கேன்கூட எடுக்கப்படும். கரோனாவுக்குப் பிந்தையப் பிரச்னைகளுக்கென பிரத்யேக வார்டுகளை ஏற்பாடு செய்ய அனைத்து மாவட்டங்களின் மருத்துவமனைகளிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
கரோனா சிகிச்சையின் முதல் வாரத்தில் ஸ்டிராய்டைப் பயன்படுத்தியது கருப்பு பூஞ்சைத் தொற்றுக்கான காரணங்களில் ஒன்று. இது தவிர்க்கப்பட வேண்டும். 2-வது வாரத்திலிருந்து ஸ்டிராய்டைப் பயன்படுத்த வேண்டும். தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கென புதிய திட்டமும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் வகுக்கப்பட்டுள்ளன" என்றார் அவர்.