கரோனாவை வென்று திரும்பிய 100 வயது தம்பதிக்கு சிறப்பான வரவேற்பு
கர்நாடக மாநிலம் பல்லாரியில் கரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய 100 வயதைக் கடந்த தம்பதிக்கு மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பல்லாரி: கர்நாடக மாநிலம் பல்லாரியில் கரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய 100 வயதைக் கடந்த தம்பதிக்கு மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கரோனா பாதித்து சுமார் ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய தும்பரகுட்டி கிராமத்தைச் சேர்ந்த இரன்னா (103) - அவரது மனைவி இரவ்வா (101) ஆகியோருக்கு மாலை அணிவித்து, கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
கடந்த வாரம் இந்த முதிய தம்பதிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. வீட்டிலேயே இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டனர். தொடர் சிகிச்சையில் இருவரும் நலமடைந்தனர்.
Advertisement
பல்லாரி மாவட்டம் கரோனா இரண்டாம் அலையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு அதிக உயிரிழப்புகளும் நேரிட்டுள்ளன.
இந்த நிலையில் தான் இந்த வயதான தம்பதி, கரோனாவிலிருந்து மீண்டு கிராமத்துக்கு திரும்பியது குறித்து கிராம மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் உற்சாக வரவேற்புக்கு ஏற்பாடு செய்தனர்.
இவர்களுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், மற்ற நோயாளிகளைப் போல இவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகவில்லை. காலையிலேயே எழுந்து நடைப்பயிற்சி மேற்கொள்வது, மருத்துவர்கள் சொல்லும் ஆலோசனைகளை மேற்கொள்வது என்று மிகச் சிறப்பாக செயல்பட்டதாகவும் இவர்கள் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்கள்.