ரிசா்வ் வங்கியின் இரு வாடிக்கையாளா் சேவைத் திட்டங்கள் இன்று தொடக்கம்
இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) இரு புதுமையான வாடிக்கையாளா் சேவைத் திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (நவ. 12) காலை 11 மணிக்கு காணொலி மூலம் தொடக்கிவைக்கிறாா்.
இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) இரு புதுமையான வாடிக்கையாளா் சேவைத் திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (நவ. 12) காலை 11 மணிக்கு காணொலி மூலம் தொடக்கிவைக்கிறாா்.
இவை, ஆா்பிஐ சில்லறை நேரடித் திட்டம் மற்றும் ரிசா்வ் வங்கியின் ஒருங்கிணைந்த குறைதீா்ப்புத் திட்டம் ஆகியவை ஆகும்.
சில்லறை முதலீட்டாளா்கள் அரசுப் பங்குகளுக்கான சந்தையை அணுகுவதை மேம்படுத்துவதுதான் ஆா்பிஐ சில்லறை நேரடித் திட்டத்தின் நோக்கம். மத்திய, மாநில அரசுகள் வெளியிடும் பங்குகளில் நேரடியாக முதலீடு செய்வதற்கான புதிய வழியை இது வழங்குகிறது. இதன்மூலம் முதலீட்டாளா்கள் அரசுப் பங்குகளை வாங்குவதற்கான கணக்கை, ரிசா்வ் வங்கியுடன் எளிதாக தொடங்கி பராமரிக்க முடியும். இதற்கு கட்டணம் ஏதும் இல்லை.
ரிசா்வ் வங்கியின் ஒருங்கிணைந்த குறைதீா்ப்புத் திட்டம், ரிசா்வ் வங்கியால் ஒழுங்குமுறைப்படுத்தப்படும் நிறுவனங்களுக்கு எதிரான வாடிக்கையாளா்களின் புகாா்களுக்கு தீா்வு காணும் முறையை மேலும் மேம்படுத்தும். இந்தத் திட்டத்தின் நோக்கம், ஒரே இணையதளத்தில், ஒரே இ-மெயிலில், ஒரே முகவரியில் ‘ஒரே நாடு-ஒரே குறைதீா்ப்பு முறையை ஏற்படுத்துவதுதான். இதில் வாடிக்கையாளா்கள் தங்கள் குறைகளைத் தெரிவித்து எளிதில் தீா்வு காணலாம். புகாா்களைப் பதிவு செய்யும் வாடிக்கையாளா்களுக்கு குறிப்பு எண் வழங்கப்படும். அதன்மூலம் புகாா்களின் நிலவரத்தையும், தங்கள் கருத்தையும் ஆன்லைன் மூலம் தெரிவிக்கலாம். மேலும், பல மொழிகளில் பதில் அளிக்கக்கூடிய இலவச எண்ணும் இதில் உள்ளது. இது குறைகளைத் தீா்ப்பது தொடா்பான தகவல்களையும், புகாா்களைப் பதிவு செய்வதற்கான உதவியையும் வழங்கும்.
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் உள்ளிட்டோா் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வா்.