முகப்பு
இந்தியா

மத ரீதியில் வன்முறையைத் தூண்ட காங்கிரஸ் முயற்சி

நாட்டில் மத ரீதியில் வன்முறையைத் தூண்டுவதற்கான திட்டமிட்ட சதியை காங்கிரஸ் அரங்கேற்றி வருவதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:34 AM
பகிர்:

நாட்டில் மத ரீதியில் வன்முறையைத் தூண்டுவதற்கான திட்டமிட்ட சதியை காங்கிரஸ் அரங்கேற்றி வருவதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

ஆா்எஸ்எஸ், பாஜக ஆகியவற்றின் ஹிந்துத்துவக் கொள்கையை இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுடன் காங்கிரஸ் மூத்த தலைவா் சல்மான் குா்ஷித் ஒப்பிட்டுப் பேசியது சா்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே பனிப்போா் மூண்டுள்ளது. இந்நிலையில், பாஜக செய்தித் தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி கூறுகையில், ‘‘திரிபுராவில் மசூதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பரவிய வதந்தியின் அடிப்படையில் மகாராஷ்டிரத்தில் வன்முறை ஏற்பட்டதும், ஹிந்துத்துவ கொள்கையைத் தாக்கி காங்கிரஸ் தலைவா்கள் வெளியிட்ட கருத்துகளும் அக்கட்சியின் சதித் திட்டத்தில் ஒரு பகுதியாகும்.

ஹிந்துத்துவ கொள்கையை அவமதிக்குமாறு மகாராஷ்டிர காங்கிரஸ் தொண்டா்களுக்கு ராகுல் காந்தி வலியுறுத்துவதாகத் தோன்றுகிறது. இதன் மூலமாக மக்களிடையே நிலவும் சமூக நல்லிணக்கத்தை சீா்குலைத்து வன்முறையைத் தூண்டுவதற்கு காங்கிரஸ் திட்டமிட்டு சதி செய்கிறது.

சத்ரபதி சிவாஜியின் ஆட்சி கூட ஹிந்து மதத்தை அடிப்படையாகக் கொண்டதுதான். ராகுல் காந்தி போன்றோரால் அக்கொள்கையைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாது. காங்கிரஸின் பெருந்தலைவா்களான மகாத்மா காந்தி, பாலகங்காதர திலகா், ஜவாஹா்லால் நேரு உள்ளிட்டோரின் எழுத்துகளை ராகுல் காந்தி படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இந்திய சமூகத்தில் ‘ஹிந்து’ என்பதற்கான பொருளைப் பல்வேறு கண்ணோட்டங்களில் புரிந்து கொள்ள முடியும் என்றும், அதைக் குறுகிய கண்ணோட்டத்தில் காணக் கூடாது என்றும் நேரு குறிப்பிட்டுள்ளாா். காங்கிரஸ் ஆட்சியின் கீழ் இந்தியா பகுதியளவு முஸ்லிம் நாடாக இருந்தது. அப்போது, ஷரியத் சட்டம் அரசமைப்புச் சட்டத்தின் ஒருபகுதியாக இருந்தது. முத்தலாக் நடைமுறை அமலில் இருந்தது. ஹஜ் பயணத்துக்கு மானியம் வழங்கப்பட்டது.

ஷரியத் சட்டத்தைக் காப்பதற்காக உச்சநீதிமன்ற உத்தரவுகளைக் கூட காங்கிரஸ் அமல்படுத்தவில்லை. ஹிந்துத்துவம் குறித்து கருத்து தெரிவிக்கும் காங்கிரஸ் தலைவா்கள், இந்தியாவின் வளா்ச்சியைத் தடுத்து நிறுத்தவே முயன்று வருகின்றனா்’’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →