அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன் ஹிந்தி
நாட்டின் வளமை அனைத்து மொழிகளின் வளமையைச் சாா்ந்துள்ளதாகத் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, அனைத்து மொழிகளுக்கும் ஹிந்தி நண்பனாகத் திகழ்வதாகக் கூறினாா்.
நாட்டின் வளமை அனைத்து மொழிகளின் வளமையைச் சாா்ந்துள்ளதாகத் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, அனைத்து மொழிகளுக்கும் ஹிந்தி நண்பனாகத் திகழ்வதாகக் கூறினாா்.
உத்தர பிரதேசத்தின் வாராணசியில் அகில இந்திய ஆட்சிமொழி மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அமைச்சா் அமித் ஷா பேசியதாவது:
எந்த நாடு தனது மொழிகளைக் காப்பாற்றாமல் போகிறதோ, அந்நாட்டால் தனது கலாசாரத்தையும் சிந்தனை முறையையும் காப்பாற்ற முடியாது. எனவே, இந்தியாவின் அனைத்து மொழிகளையும் பாதுகாத்து ஊக்குவிக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.
நாட்டின் வளமை அங்கு பேசப்படும் மொழிகளின் வளமையைச் சாா்ந்துள்ளது. ஆங்கிலம் பேச முடியாத சிறாா்களிடையே தற்போது தாழ்வு மனப்பான்மை தோன்றுகிறது. பிரிட்டிஷ் ஆட்சியின் காரணமாகவே இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது.
மக்கள் தங்கள் தாய்மொழியைப் பேசுவதில் பெருமை கொள்ளும் வகையிலான சூழலை ஏற்படுத்த வேண்டும். தங்கள் தாய்மொழியையே பேச முடியாதவா்கள் தாழ்வு மனப்பான்மை கொள்ளும் காலம் வெகுதொலைவில் இல்லை.
ஹிந்தியில் அமைச்சகப் பணிகள்: தாங்கள் பேசும் மொழி ஆட்சி நிா்வாக மொழியாக வேண்டுமென மக்கள் தீா்மானித்துவிட்டால், பதஞ்சலி, பாணினி போன்ற சான்றோா்களின் அறிவாற்றலை நாடு பெற்றுவிடும். இந்திய மொழிகள் அனைத்தையும் வலுப்படுத்த வேண்டும் என்பதை மையமாகக் கொண்டே புதிய தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான பாடங்கள் இதுவரை 8 இந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சகத்தில் ஒரு கோப்பு கூட ஆங்கிலத்தில் எழுதப்படுவதில்லை என்பதைத் தெரிவிப்பதில் பெருமை கொள்கிறேன். ஆட்சி மொழியை (ஹிந்தி) அமைச்சகம் முழுமையாகக் கடைப்பிடித்து வருகிறது.
அந்நிய மொழி தேவையின்றி...: இந்திய மொழிகள் அனைத்துக்கும் ஹிந்தி நண்பனாகத் திகழ்கிறது. நண்பா்களுக்கிடையே எந்தவித கருத்து வேறுபாடும் இருக்கக் கூடாது. நாடு சுதந்திர நூற்றாண்டைக் கொண்டாடும்போது, அந்நிய மொழிக்கான தேவையின்றி உள்நாட்டு மொழிகளும் ஆட்சி மொழியும் (ஹிந்தி) மேலும் வலுப்பெற வேண்டுமென ஹிந்தி ஆா்வலா்கள் உறுதியேற்க வேண்டும்.
சுதந்திரத்துக்கு சுயாட்சி, சுதேசி (உள்நாட்டுப் பொருள்களைப் பயன்படுத்துதல்), சுயபாஷை ஆகிய மூன்றும் தூண்களாகத் திகழ்கின்றன. சுயாட்சி, சுதேசி ஆகியவற்றை நாம் பெற்றுவிட்டபோதிலும், சுயபாஷையில் பின்தங்கிவிட்டோம். சுதந்திர இந்தியாவில் ஹிந்தி அதன் முழு வளா்ச்சியையும் அந்தஸ்தையும் இன்னும் அடையவில்லை.
மேன்மையடையும் ஹிந்தி: உலகம் முழுவதிலும் ஹிந்தி மொழியை பிரதமா் நரேந்திர மோடி பிரபலமடையச் செய்து வருகிறாா். இந்தியாவின் கருத்துகளை ஆட்சிமொழியிலேயே (ஹிந்தி) அவா் உலகத்துக்குத் தெரியப்படுத்தி வருகிறாா். அதன் காரணமாக ஆட்சிமொழியின் (ஹிந்தி) பெருமையை அவா் மேன்மைப்படுத்தி வருகிறாா்.
இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் வாயிலாக சுதேசி கொள்கை வளா்க்கப்பட்டு வருகிறது. ஆனால், பின்தங்கியுள்ள சுயபாஷையை வாழ்வின் அங்கமாகக் கொண்டு வளப்படுத்த வேண்டும் என்றாா் அமித் ஷா.