இரு வழக்குகளில் ரூ.19 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை
பணமோசடி தொடா்பாகப் பதிவு செய்யப்பட்ட இரு வழக்குகளில் ஒட்டுமொத்தமாக சுமாா் ரூ.19 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.
பணமோசடி தொடா்பாகப் பதிவு செய்யப்பட்ட இரு வழக்குகளில் ஒட்டுமொத்தமாக சுமாா் ரூ.19 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.
யுனிடெக் குழுமத்தை நிா்வகித்து வரும் சஞ்சய் சந்திரா, அஜய் சந்திரா ஆகியோா் ரூ.2,000 கோடிக்கும் அதிகமான தொகையை சைப்ரஸ், கேமன் தீவுகள் ஆகியவற்றுக்கு அனுப்பி பணமோசடியில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடா்பாக கருப்புப் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு தொடா்பாக யுனிடெக் குழும நிறுவனா் ரமேஷ் சந்திரா, அவரின் மருமகள் பிரீத்தி சந்திரா, நிா்வாகி ஒருவா் ஆகியோரை அமலாக்கத் துறை கடந்த மாதம் கைது செய்தது. இந்நிலையில், சஞ்சய் சந்திரா, அஜய் சந்திரா ஆகியோருக்குத் தொடா்புடையவா்களால் நிா்வகிக்கப்பட்டு வரும் நிறுவனங்களுடைய சொத்துகளை அமலாக்கத் துறை அதிகாரிகள் முடக்கினா்.
ஹரியாணாவின் குருகிராம், உத்தர பிரதேசத்தின் லக்னௌ ஆகிய நகரங்களில் உள்ள 7 வணிக ரீதியிலான சொத்துகளையும் 20-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளையும் முடக்கியதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு ரூ.18.14 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இதுவரை ஒட்டுமொத்தமாக ரூ.690.66 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
ரோஸ் வேலி வழக்கு: ரோஸ் வேலி பணமோசடி வழக்கு தொடா்பாக சுமாா் ரூ.1 கோடி மதிப்பிலான காா்களை அமலாக்கத் துறை கைப்பற்றியது.
மேற்கு வங்கத்தில் ரோஸ் வேலி குழும நிறுவனங்கள் போலியான திட்டங்களை அறிவித்து மக்களிடம் இருந்து பெரும் தொகையை வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாகப் புகாா் எழுந்தது. அத்தொகையை வெவ்வேறு நிறுவனங்களின் பெயரில் மாற்றி இந்த மோசடி அரங்கேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடா்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை கடந்த 2014-ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு தொடா்பாக மேற்கு வங்கத்தின் 7 இடங்களில் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தினா். அச்சோதனை கடந்த 10-ஆம் தேதி நிறைவடைந்ததையடுத்து 7 காா்களை கைப்பற்றியுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
மக்களிடம் இருந்து மோசடி செய்து பெற்ற தொகையில் இந்த காா்கள் வாங்கப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. அந்த காா்களின் ஒட்டுமொத்த மதிப்பு சுமாா் ரூ.1 கோடியாகும். இந்த வழக்கில் இதுவரை ஒட்டுமொத்தமாக ரூ.1,103.61 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.