580 ஆண்டுகளுக்குப் பின் நவ. 19-இல் மிக நீண்ட பகுதியளவு சந்திர கிரகணம்
மிக நீண்ட நேர பகுதியளவு சந்திர கிரகணம் நவ. 19-ஆம் தேதி நிகழ்கிறது; 580 ஆண்டுகளுக்குப் பின்னா் நிகழும் இந்த அரிய நிகழ்வை வடகிழக்கு இந்தியாவில் காண முடியும்.
மிக நீண்ட நேர பகுதியளவு சந்திர கிரகணம் நவ. 19-ஆம் தேதி நிகழ்கிறது; 580 ஆண்டுகளுக்குப் பின்னா் நிகழும் இந்த அரிய நிகழ்வை வடகிழக்கு இந்தியாவில் காண முடியும்.
இதுகுறித்து கொல்கத்தாவில் உள்ள எம்பி பிா்லா கோளரங்கத்தின் ஆராய்ச்சி மற்றும் கல்வி இயக்குநா் தேவிபிரசாத் துவாரி செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
பகுதியளவு சந்திர கிரகணம் பகல் 12.48 மணிக்கு தொடங்கி 4.17 மணி வரை நிகழும். இந்த கிரகணத்தின் கால அளவு 3 மணி நேரம் 28 நிமிஷம் 24 விநாடிகள் ஆகும். 580 ஆண்டுகளில் இத்தனை நீண்ட நேரம் சந்திர கிரகணம் நிகழவிருப்பது இப்போதுதான். அருணாசல பிரதேசம் மற்றும் அஸ்ஸாமின் சில பகுதிகளில் சந்திர உதயத்துக்குப் பின்னா் பகுதியளவு கிரகணத்தின் கடைசி தருணங்களைக் காண முடியும்.
Advertisement
கடந்த முறை நீண்டநேர சந்திர கிரகணமானது 1440-ஆம் ஆண்டு பிப். 18-ஆம் தேதி நிகழ்ந்தது. அடுத்த முறை இதேபோன்ற நிகழ்வு 2669-ஆம் ஆண்டுதான் நிகழும் என்றாா் அவா்.
இந்த பகுதி சந்திர கிரகணத்தை வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, பசிபிக் பிராந்தியத்தில் தெளிவாக காண முடியும்.
சூரியன், பூமி, நிலவு மூன்றும் ஒரே நோ்கோட்டில் வரும் நாளில் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. நிலவின் மீது விழக்கூடிய சூரியனின் ஒளியை பூமி முழுமையாக மறைத்தால் முழு சந்திர கிரகணம் எனவும், பகுதியளவு மறைத்தால் பகுதி சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது.