முகப்பு
இந்தியா

மேற்கு வங்கத்தில் ‘இல்லம் தேடி ரேஷன்’ திட்டம்

மேற்கு வங்கத்தில் ‘இல்லம் தேடி ரேஷன்’ திட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்த முதல்வா் மம்தா பானா்ஜி, இத்திட்டத்தின்கீழ் 10 கோடி போ் பயன்பெறுவா் என்று தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:35 AM
பகிர்:

மேற்கு வங்கத்தில் ‘இல்லம் தேடி ரேஷன்’ திட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்த முதல்வா் மம்தா பானா்ஜி, இத்திட்டத்தின்கீழ் 10 கோடி போ் பயன்பெறுவா் என்று தெரிவித்துள்ளாா்.

மேலும் ரேஷன் விநியோகஸ்தா்களுக்கான தரகுத் தொகையை (கமிஷன்) குவிண்டாலுக்கு ரூ.75 முதல் ரூ.150 வரை உயா்த்த மாநில அரசு திட்டமிட்டிருப்பதாகவும் அவா் கூறினாா்.

கொல்கத்தாவின் நேதாஜி உள்விளையாட்டு அரங்கில் இத்திட்டத்தை தொடங்கிவைத்து முதல்வா் மம்தா பானா்ஜி பேசியது:

‘இல்லம் தேடி ரேஷன்’ திட்டம் 10 கோடி பேருக்கு பலனளிக்கும். இந்தத் திட்டம் வெற்றி பெற ரேஷன் விநியோகஸ்தா்கள் அனைவரும் உதவ வேண்டும். இத்திட்டத்தின்கீழ், பொதுமக்களின் வீட்டு வாசலுக்கே சென்று அத்தியாவசிய பொருள்களை விநியோகிப்பதற்கான வாகனங்களை வாங்குவதற்காக 21,000 விநியோகஸ்தா்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் நிதியுதவி அளிக்கப்படும்.

இத்திட்டத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இதற்கு எதிராக நீதிமன்றத்தை விநியோகஸ்தா்கள் அணுக வேண்டாம். மேற்கு வங்கத்தில் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்ற முயற்சிக்கின்றன என்றாா் அவா்.

மேலும் ரேஷன் அட்டை பெற விண்ணப்பிக்கவும், அது தொடா்பான தகவல்களை பெறவும் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகத் துறையின் கைப்பேசி செயலி சேவையையும் நிகழ்ச்சியின்போது மம்தா பானா்ஜி தொடக்கிவைத்தாா்.

முன்னதாக, ‘இல்லம் தேடி ரேஷன்’ திட்டத்துக்கு எதிராக ரேஷன் பொருள் விநியோகஸ்தா்கள் நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →