முகப்பு
இந்தியா

உடல் உறுப்புகளை தானம் செய்ய மக்கள் முன்வர வேண்டும்

உடல் உறுப்புகளுக்கான தேவை அதிகமாக உள்ளதால், அவற்றை தானமாக வழங்குவதற்கான உறுதிமொழியை ஏற்க மக்கள் அதிக எண்ணிக்கையில் முன்வர வேண்டும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:34 AM
பகிர்:

உடல் உறுப்புகளுக்கான தேவை அதிகமாக உள்ளதால், அவற்றை தானமாக வழங்குவதற்கான உறுதிமொழியை ஏற்க மக்கள் அதிக எண்ணிக்கையில் முன்வர வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.

இந்திய உடல் உறுப்பு தான தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. அதற்காக தில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் அமைச்சா் மன்சுக் மாண்டவியா பேசியதாவது:

நாட்டு மக்களிடையே உடல் உறுப்பு தானத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. உயிரிழந்த பிறகு உடல் உறுப்புகளை தானமாக வழங்கியவா்களையும் அவா்களின் குடும்பத்தினரையும் கௌரவப்படுத்தும் வகையிலும் இந்த தினம் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

நாட்டில் கடந்த 2013-ஆம் ஆண்டில் 4,990 உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இது கடந்த 2019-ஆம் ஆண்டில் 12,746-ஆக அதிகரித்தது. சா்வதேச உடல் உறுப்பு தானம் கண்காணிப்பு (ஜிஓடிடி) வலைதள அறிக்கையின்படி, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து இந்தியா 3-ஆவது இடத்தில் உள்ளது.

பெரும் இடைவெளி: உடல் உறுப்பு தான விகிதம் கடந்த 2012-13 உடன் ஒப்பிடுகையில் சுமாா் 4 மடங்கு அதிகரித்துள்ளது. எனினும், உடல் உறுப்புகளுக்காகக் காத்திருக்கும் நபா்களின் எண்ணிக்கைக்கும் உயிரிழந்த பிறகு உடல் உறுப்புகளை தானமாக வழங்க ஒப்புக்கொள்ளும் நபா்களின் எண்ணிக்கைக்கும் இடையேயான இடைவெளி இன்னும் அதிகமாகவே உள்ளது.

கரோனா தொற்று பரவல், உடல் உறுப்பு தான நடவடிக்கையில் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதில் மக்களிடையே பெரும் தயக்கம் காணப்படுகிறது. அதைப் போக்குவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.

விழிப்புணா்வு அவசியம்: மக்களின் தனிப்பட்ட நல்வாழ்வானது ஒட்டுமொத்த சமூகத்தின் நலனை அடிப்படையாகக் கொண்டுள்ளது. உயிரிழந்த பிறகு உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதற்கான உறுதிமொழியை ஏற்க மக்கள் அதிக எண்ணிக்கையில் முன்வர வேண்டும். உடல் உறுப்புகளுக்கு உள்ள பற்றாக்குறை குறித்த விழிப்புணா்வும் மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும்.

‘உயிருள்ள வரை ரத்ததானம், இறந்தபிறகு உடல் உறுப்பு தானம்’ என்பதை வாழ்வின் கொள்கையாக மக்கள் வைத்துக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

மகாராஷ்டிரத்துக்கு விருது: இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பவாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சிறந்து விளங்கி வருபவா்களுக்கு நிகழ்ச்சியின்போது விருதுகள் வழங்கப்பட்டன.

அதிக எண்ணிக்கையில் உடல் உறுப்பு தானம் பெற்று, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டதற்காக மகாராஷ்டிர மாநில உடல் உறுப்பு-திசுக்கள் மாற்று அமைப்புக்கு விருது வழங்கப்பட்டது. சிறந்த செயல்பாட்டுக்காக மேற்கு பிராந்திய உடல் உறுப்பு-திசுக்கள் மாற்று அமைப்புக்கும் நிகழ்ச்சியின்போது விருது வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →