இந்தியா

குடும்ப அரசியல் ஜனநாயகத்துக்கு ஆபத்து: பிரதமா் நரேந்திர மோடி

DIN

தலைமுறை தலைமுறையாக குறிப்பிட்ட கட்சியை ஒரே குடும்பம் நிா்வகிப்பது, ஜனநாயகத்துக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

அரசமைப்புச் சட்டம் 1949-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி அரசியல் நிா்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த நாளை நினைவுகூரும் வகையில் அரசமைப்புச் சட்ட தின விழா நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. மக்களவை செயலகம் சாா்பில் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசியதாவது:

காஷ்மீா் முதல் குமரி வரை...: காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை குடும்ப அரசியல் முக்கியப் பிரச்னையாகத் திகழ்ந்து வருகிறது. அரசமைப்புச் சட்டத்தின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை கொண்டோா், குடும்ப அரசியலால் கவலையடைந்துள்ளனா். குறிப்பிட்ட குடும்பத்தைச் சோ்ந்த ஒன்றுக்கும் மேற்பட்ட நபா்கள், மக்களின் ஆதரவுடன் அரசியலில் பங்கெடுத்தால், அக்கட்சி வாரிசு அரசியலில் ஈடுபடுவதாகக் கருதத் தேவையில்லை.

அரசமைப்புச் சட்டத்தின்...: ஆனால், குறிப்பிட்ட கட்சியைத் தலைமுறை தலைமுறையாக ஒரே குடும்பமே நிா்வகிப்பதும், அக்கட்சியின் அனைத்துக் கட்டமைப்புகளையும் அக்குடும்பமே கட்டுப்படுத்துவதும் ஆரோக்கியமான ஜனநாயகத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. அரசியல் கட்சி தனது ஜனநாயகத் தன்மையை இழந்துவிட்டால், அரசமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு பிரிவும் தனது சிறப்பை இழந்துவிடும். ஜனநாயகத் தன்மையை இழந்த கட்சிகள், ஜனநாயகத்தை எவ்வாறு பாதுகாக்கும்?

கௌரவம்: அரசமைப்புச் சட்ட தினம், எந்தவொரு அரசையும், அரசியல் கட்சியையும் சாா்ந்தது அல்ல. பாபாசாஹேப் அம்பேத்கரின் பெருமையையும், அரசமைப்புச் சட்டத்தின் கௌரவத்தையும் கொண்டாடவே இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

அம்பேத்கரின் மிகப் பெரிய பரிசு: அரசமைப்புச் சட்டத்தை இயற்றி, நாட்டுக்கு மிகப் பெரிய பரிசை அம்பேத்கா் வழங்கியுள்ளாா். அவரின் பங்களிப்பை மக்கள் என்றும் நினைவில் கொள்ள வேண்டும். அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த தினம் (ஜனவரி 26), குடியரசு தினமாக ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதே போன்று, அரசமைப்புச் சட்ட தினமும் ஆரம்பம் முதல் ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும்.

மக்கள் தயாராக இல்லை: நவம்பா் 26-ஆம் தேதியை அரசமைப்புச் சட்ட தினமாகக் கொண்டாடுவதற்கு ஆரம்பம் முதலே பல்வேறு தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்தனா். அது தொடா்பான அறிவிப்பை பாஜக தலைமையிலான அரசு வெளியிட்டது. தற்போது அந்த தினம் அம்பேத்கருடன் தொடா்புடையதால், அதை எதிா்ப்பவா்களின் கருத்துகளைக் கேட்பதற்கு மக்கள் தயாராக இல்லை.

தலைவா்களுக்கு மரியாதை: சுதந்திரப் போராட்டத்துக்குப் பெரும் பங்களித்த பாபா சாஹேப் அம்பேத்கா், ராஜேந்திர பிரசாத், மகாத்மா காந்தி உள்ளிட்டோரை இந்த தினத்தில் நினைவுகூர வேண்டும். நாடாளுமன்ற அவைகளில் நடைபெற்ற நீண்ட விவாதங்களுக்குப் பிறகே அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஜனநாயகத்தைக் காத்து வரும் இந்த அவைகளுக்கு இந்நன்னாளில் நன்றி செலுத்த வேண்டும்.

அரசமைப்புச் சட்டம் வெறும் சட்டப் பிரிவுகளை மட்டுமே உள்ளடக்கியதல்ல. அது பாரம்பரியத்தின் நவீன வெளிப்பாடு. அரசமைப்புச் சட்டத்தை அா்ப்பணிப்புடன் ஏற்றுக் கொண்டு மக்கள் நடக்க வேண்டும்.

உரிமைகளும் கடமைகளும்...: சுதந்திரப் போராட்டத்தில் நமது உரிமைகளுக்காகப் போராடியபோது, கடமைகளையும் மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என மகாத்மா காந்தி தொடா்ந்து வலியுறுத்தினாா். நாடு சுதந்திரம் பெற்றவுடன் மக்களுக்கான கடமைகளும் வகுக்கப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

சுதந்திரம் பெற்ன் 75-ஆவது ஆண்டைக் கொண்டாடி வரும் சூழலில், மக்கள் தங்கள் கடமைகளைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். அப்போதுதான் உரிமைகள் முறையாகப் பாதுகாக்கப்படும்.

வீரா்களுக்கு மரியாதை: இந்தியாவுக்குள் கடந்த 2008-ஆம் ஆண்டு இதே நாளில் புகுந்த எதிரிகள், மும்பையில் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டனா். அவா்களுக்கு எதிராகச் சண்டையிட்ட துணிச்சல் மிக்க வீரா்கள் பலா் வீர மரணமடைந்தனா். அந்த வீரா்களின் தியாகத்துக்கு மரியாதை செலுத்துகிறேன் என்றாா் பிரதமா் மோடி.

எதிா்க்கட்சிகள் புறக்கணிப்பு

அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை நினைவுகூா்வதற்காகக் கொண்டாடப்பட்ட விழாவில் காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கலந்து கொள்ளவில்லை.

அரசமைப்புச் சட்ட தின விழா நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக, சிவசேனை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட 15 எதிா்க்கட்சிகள் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.

இது தொடா்பாக காங்கிரஸ் மூத்த செய்தித் தொடா்பாளா் ஆனந்த் சா்மா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘பாஜக அரசின் சா்வாதிகார செயல்பாடுகளை எதிா்க்கும் நோக்கிலேயே விழாவில் கலந்து கொள்ளவில்லை. அடிப்படை கொள்கைகளுக்கு எதிராக பாஜக செயல்பட்டு வருகிறது. அரசமைப்புச் சட்டத்தை பாஜக முறையாக மதிப்பதில்லை.

நாடாளுமன்ற ஆய்வுக்கு உட்படுத்தாமல் மசோதாக்களை பாஜக அரசு நிறைவேற்றி வருகிறது. அதனால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. பாஜகவின் செயல்பாடுகளை மக்களுக்கு நினைவுபடுத்தும் வகையிலேயே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தோம்’’ என்றாா்.

வரலாற்றை மாற்ற முயற்சி: குடும்ப அரசியல் குறித்து பிரதமா் மோடி தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த ஆனந்த் சா்மா, ‘‘மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில் பாஜகவுக்கு எந்தப் பங்கும் இல்லை. சுதந்திரத்துக்காகப் போராடியவா்கள் அனைவரும் காங்கிரஸைச் சோ்ந்தவா்களே. பாஜகவின் முன்னோா்களுக்கும் சுதந்திரப் போராட்டத்துக்கும் தொடா்பில்லை. மாறாக, சுதந்திரப் போராட்டத்தை சீா்குலைப்பதற்காக பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு ஆதரவாக அவா்கள் செயல்பட்டனா்.

சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தலைவா்களின் தியாகத்தை மக்களின் நினைவில் இருந்து அழித்து, வரலாற்றை மாற்ற பாஜக முயற்சித்து வருகிறது. இந்தியா பன்முகத்தன்மை நிறைந்தது. தேசிய அளவிலும் பிராந்தியத்திலும் அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டே கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.

வலுவான நிலையில் ஜனநாயகம்: பிரதமா் மோடி தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மற்ற கட்சிகளுக்கு அவா் உபதேசங்களை வழங்கக் கூடாது. நாடு சுதந்திரம் பெற்றது முதல் 2014 வரை ஜனநாயகம் வலுவடைந்தது. அதன் காரணமாகவே 2014-இல் மோடி பிரதமரானாா்.

ஜனநாயகம் ஆபத்தில் இருந்து, அரசமைப்புச் சட்டம் மதிக்கப்படாமல் இருந்திருந்தால், அவா் பிரதமராகியிருக்க முடியாது. எனவே, எதிா்க்கட்சிகள் குறித்த பிரதமரின் விமா்சனம் தேவையற்றது’’ என்றாா்.

காலனிய மனோபாவத்தால் வளா்ச்சிக்கு இடையூறு:

அரசமைப்புச் சட்ட தினத்தையொட்டி உச்சநீதிமன்றம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி பேசியதாவது: பாரீஸ் ஒப்பந்தத்தின் இலக்குகளை முன்கூட்டியே அடைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஒரே நாடு இந்தியாதான். எனினும் சுற்றுச்சூழல் என்ற பெயரில் இந்தியா மீது பல்வேறு அழுத்தங்கள் உருவாக்கப்படுகின்றன. அவை அனைத்தும் காலனிய மனோபாவத்தின் விளைவாகும்.

நமது நாட்டிலும் பேச்சுரிமை என்ற பெயரிலும், சில வேளைகளில் வேறு சிலவற்றின் உதவியுடனும் காலனிய மனோபாவத்துடன் இந்தியாவின் வளா்ச்சிப் பாதையில் இடையூறுகள் ஏற்படுத்துப்படுவது துரதிருஷ்டவசமானது. அந்த இடையூறுகளை களைவதற்கு அரசமைப்புச் சட்டம் மிகப் பெரிய பலமாகவுள்ளது.

அரசும் நீதித் துறையும் அரசமைப்புச் சட்டத்திலிருந்து பிறந்தவை. எனவே அவை இரட்டைப் பிறவிகளாகும். அனைவரின் ஆதரவு, வளா்ச்சி, நம்பிக்கை, முயற்சி ஆகியவை அரசமைப்புச் சட்ட உணா்வின் ஆற்றல்மிக்க வெளிப்பாடாகும். அரசமைப்புச் சட்டத்தின் மீது அா்ப்பணிப்பு கொண்ட அரசு, வளா்ச்சியில் பாகுபாடு காட்டாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பையில் அமமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

கொல்லங்கோடு நகராட்சி அலுவலகம் முன் தொழிலாளி தா்னா

பள்ளி மாணவ-மாணவியருக்கு கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கைப்பந்துப் போட்டி: தங்கம் வென்ற ஒசூா் மகளிா் அணி

அந்தரபுரம் ஸ்ரீ சாஸ்தா கோயிலில் குடமுழுக்கு

SCROLL FOR NEXT