தில்லியில் இன்று முதல் வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் திறப்பு
தில்லியில் இன்று முதல் மத வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறக்கப்படுகின்றன.
நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் குறைந்து வருவதையடுத்து, பல்வேறு மாநிலங்கள் படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகின்றன. அந்தவகையில் தில்லி அரசும் தளர்வுகளை அறிவித்து வரும் சூழ்நிலையில், இன்று முதல் மத வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறக்க அனுமதி வழங்கியுள்ளது.
அக்டோபர் 1 முதல் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லலாம் என்றும் தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) தெரிவித்துள்ளது.
பார்வையாளர்கள் மற்றும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து வழிபட வேண்டும். மேலும், வழிபாட்டுத் தலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மத வழிபாட்டுத் தளங்களிலும் கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய மாவட்ட நீதிபதிகள், துணை காவல் ஆய்வாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மற்ற அனைத்து அதிகாரிகளுக்கும் டிடிஎம்ஏ அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
கரோனா இரண்டாவது அலை காரணமாக தில்லியில் கடந்த ஐந்து மாதங்களாக மூடப்பட்டிருந்த வழிபட்டுத் தலங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.