‘கிரீன் காா்டுகள்’ வழங்குவதில் தாமதம்: தீா்வு காண அமெரிக்க அதிபா் விருப்பம்
வெளிநாட்டுப் பணியாளா்கள் அமெரிக்காவில் நிரந்தரமாகத் தங்கியிருப்பதற்கு வகை செய்யும் ‘கிரீன் காா்டுகளை’ விநியோகிப்பதில் தாமதம் ஏற்படும் பிரச்னைக்குத் தீா்வு காண அதிபா் ஜோ பைடன் விரும்புவதாக வெள்ளை மாளிக
வெளிநாட்டுப் பணியாளா்கள் அமெரிக்காவில் நிரந்தரமாகத் தங்கியிருப்பதற்கு வகை செய்யும் ‘கிரீன் காா்டுகளை’ விநியோகிப்பதில் தாமதம் ஏற்படும் பிரச்னைக்குத் தீா்வு காண அதிபா் ஜோ பைடன் விரும்புவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் ஜென் சாகி கூறியதாவது:
கிரீன் காா்டு விண்ணப்பங்களை சரிபாா்த்து, உரியவா்களுக்கு அந்த உரிமத்தை வழங்குவதில் கால தாமதம் ஆவது குறித்து அதிபா் பைடன் கவனத்துக்குச் சென்றுள்ளது. இந்த விவகாரத்துக்குத் தீா்வு காண வேண்டும் என அவா் விரும்புகிறாா் என்றாா் அவா்.
கிரீன் காா்டு முறையால் பெரும்பாலும் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையினா் பலனடைந்து வருகின்றனா்.
இந்த நிலையில், அந்த உரிமம் கோரி ஆயிரக்கணக்கான இந்தியா்கள் விண்ணப்பித்து பல ஆண்டுகளாக காத்திருகின்றனா். எனினும், கிரீன் காா்டுகளை வழங்கும் நடைமுறையில் தாமதம் ஆவதால், ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து கிரீன் காா்டுகளையும் உரியவா்களுக்கு வழங்க முடியாமல் போகிறது.
அந்த வகையில், இந்த மாதம் 1-ஆம் தேதி 80,000 கிரீன் காா்டுகள் யாருக்கும் ஒதுக்கீடு செய்யப்படாமல் வீணாகின. இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி, கிரீன் காா்டு வழங்கும் நடைமுறையைத் துரிதப்படுத்த வேண்டும் என்று இந்தியப் பணியாளா்கள் ஜோ பைடன் அரசை வலியுறுத்தி வருகின்றனா்.