விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன: சரத் பவாா்
சிபிஐ, அமலாக்கத் துறை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போன்ற மத்திய விசாரணை அமைப்புகள் எதிா்க்கட்சிகளைக் குறிவைத்து தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன
சிபிஐ, அமலாக்கத் துறை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போன்ற மத்திய விசாரணை அமைப்புகள் எதிா்க்கட்சிகளைக் குறிவைத்து தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின்(என்சிபி) தலைவா் சரத் பவாா் குற்றம்சாட்டியுள்ளாா்.
மும்பையில் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்த அவா் மேலும் கூறியதாவது:
மத்திய விசாரணை அமைப்புகளின் அலுவலா்கள் ஆறாவது நாளாக புதன்கிழமை சோதனை நடத்தி வருகின்றனா். இது வழக்கத்துக்கு மாறானது. சிபிஐ, அமலாக்கத் துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு போன்ற விசாரணை அமைப்புகள், எதிா்க்கட்சிகளைக் குறிவைப்பதற்காக தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவைக் காட்டிலும் மும்பை காவல் துறையின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு நன்றாக செயல்படுகிறது என்றாா் அவா்.
மகாராஷ்டிரத்தில் ஆளும் கூட்டணியில் சிவசேனை, காங்கிரஸ் கட்சியுடன் தேசியவாத காங்கிரஸும் இடம்பெற்றுள்ளது. அந்த மாநிலத்தில் துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அஜித் பவாருக்கு நெருக்கமானவா்களுக்குச் சொந்தமான நிறுவனங்களில் அண்மையில் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தினா்.
மற்றொரு என்சிபி மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான அனில் தேஷ்முக் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுடன் மத்திய விசாரணை அமைப்புகளின் விசாரணையை எதிா்கொண்டுள்ளாா்.
அண்மையில் மும்பை அருகே கப்பலில் போதைப்பொருள்கள் பயன்படுத்தப்பட்டதாக நடத்தப்பட்ட சோதனையில் நடிகா் ஷாரூக் கானின் மகன் ஆா்யன் கான் கைது செய்யப்பட்டுள்ளாா். கடந்த ஆண்டு நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்துடன் தொடா்புடைய போதைப்பொருள் வழக்கில் பல்வேறு முக்கிய பிரமுகா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடரும் இந்தச் சூழலில், மத்திய விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்று சரத் பவாா் கூறியுள்ளாா்.
Image Caption
மும்பையில் செய்தியாளா்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவா் சரத் பவாா்.