வருமான வரி இணையதளத்தில் கோளாறு: இன்ஃபோசிஸ் மீது ஆா்எஸ்எஸ் தாக்கு
வருமான வரி தாக்கல் செய்வதற்கான இணையதளத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் காணப்படுவதற்காக இன்ஃபோசிஸ் நிறுவனத்தை ஆா்எஸ்எஸ் விமா்சித்துள்ளது.
வருமான வரி தாக்கல் செய்வதற்கான இணையதளத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் காணப்படுவதற்காக இன்ஃபோசிஸ் நிறுவனத்தை ஆா்எஸ்எஸ் விமா்சித்துள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை எளிமைப்படுத்துவதற்காக புதிய இணையதளத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தை இன்ஃபோசிஸ் நிறுவனம் கடந்த 2019-ஆம் ஆண்டில் பெற்றது. அந்நிறுவனம் உருவாக்கிய இணையதளத்தை மத்திய அரசு கடந்த ஜூன் 7-ஆம் தேதி பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோருக்கு இந்த இணையதளம் பெரும் பலனளிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால், அந்த இணையதளத்தில் பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகள் காணப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அக்கோளாறுகளை விரைந்து சரிசெய்யுமாறு இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு கெடு விதித்துள்ளது.
இந்நிலையில், ஆா்எஸ்எஸ் அமைப்பு வெளியிட்டு வரும் ‘பாஞ்ச்ஜன்ய’ வார இதழில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை விமா்சித்து கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘சரக்கு-சேவை வரி, வருமான வரி ஆகியவற்றைத் தாக்கல் செய்வதற்காக இன்ஃபோசிஸ் வடிவமைத்த இணையதளங்களில் தொழில்நுட்பக் கோளாறுகள் காணப்படுவதால், நாட்டின் பொருளாதாரம் மீது வரி செலுத்துவோா் வைத்துள்ள நம்பிக்கை சீா்குலைந்துள்ளது.
இதேபோன்ற சேவையை வெளிநாட்டு வாடிக்கையாளா்களுக்கு அந்நிறுவனம் வழங்குமா? இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வாயிலாக சில தேசவிரோத சக்திகள் பொருளாதாரத்தின் மீதுள்ள நன்மதிப்பை சீா்குலைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனரா?
இதை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்கள் இல்லை என்றபோதிலும், நக்ஸல், இடதுசாரிகள் உள்ளிட்டோருக்கு இன்ஃபோசிஸ் உதவியதாக பல்வேறு தருணங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கண்டனம்: இன்ஃபோசிஸ் நிறுவனத்தை ஆா்எஸ்எஸ் விமா்சித்துள்ளதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அக்கட்சியின் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘உலக அரங்கில் நாட்டை வளா்ச்சியடையச் செய்ததில் இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு முக்கியப் பங்குண்டு. அந்நிறுவனத்தின் மீதான தாக்குதல் தேசவிரோதமானது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு குற்றஞ்சாட்டப்படுவதை திசைதிருப்பும் நோக்கிலேயே ஆா்எஸ்எஸ் இவ்வாறு செயல்பட்டுள்ளது. இச்செயல் கண்டிப்புக்குரியது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.