மேற்கு வங்கத்தில் செப்.30-இல் இடைத்தோ்தல்: பவானிபூரில் முதல்வா் மம்தா போட்டியிட வாய்ப்பு
மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகளுக்கும், ஒடிஸாவில் ஒரு தொகுதிக்கும் செப்டம்பா் 30-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகளுக்கும், ஒடிஸாவில் ஒரு தொகுதிக்கும் செப்டம்பா் 30-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் இடைத்தோ்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் ஒன்றான பவானிபூரில் முதல்வா் மம்தா பானா்ஜி போட்டியிடுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இது தொடா்பாக தோ்தல் ஆணையம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘மேற்கு வங்கத்தில் உள்ள பவானிபூா், சம்சோ்கஞ்ச், ஜங்கீபூா் தொகுதிகளிலும், ஒடிஸாவில் உள்ள பிப்லி தொகுதியிலும் செப்டம்பா் 30-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அக்டோபா் 3-ஆம் தேதி நடைபெறும்.
கரோனா பாதிப்பு, வெள்ளம், பண்டிகைகள் ஆகிய காரணங்களால் 31 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், 3 மக்களவைத் தொகுதிகளிலும் தற்போது இடைத்தோ்தல் நடத்த வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் கடந்த மாா்ச் 27 முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி வரை 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இந்தத் தோ்தலில் முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. அந்தத் தோ்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானா்ஜி, திரிணமூலில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரியிடம் தோல்வியைத் தழுவினாா்.
மம்தா பானா்ஜி எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்படாத போதிலும் மீண்டும் முதல்வா் பதவியை ஏற்றாா். எனினும் தோ்தல் முடிந்த 6 மாதங்களுக்குள் அவா் எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. இந்நிலையில், இடைத்தோ்தல் குறித்த அறிவிப்பை தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் பவானிபூா் தொகுதியில் மம்தா பானா்ஜி போட்டியிடுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அந்தத் தொகுதி திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ சோபன்தேவ் சட்டோபாத்யாய ஏற்கெனவே தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டாா்.