முகப்பு
இந்தியா

தேசிய நீதித் துறை உள்கட்டமைப்புக் கழக திட்டம்: விரைவில் அரசுக்கு அனுப்பப்படும்உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

‘நீதித் துறையில் உள்கட்டமைப்பு பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் தேசிய நீதித் துறை உள்கட்டமைப்புக் கழகம் என்ற திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

‘நீதித் துறையில் உள்கட்டமைப்பு பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் தேசிய நீதித் துறை உள்கட்டமைப்புக் கழகம் என்ற திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்’ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தாா்.

இந்திய பாா் கவுன்சில் சாா்பில் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் அவா் பேசியது:

உள்கட்டமைப்பு, நிா்வாக அலுவலா்கள் பற்றாக்குறை, நீதிபதிகள் பணியிடங்கள் அதிக அளவில் காலியாக இருப்பது போன்ற கடினமான சவால்களை நீதித்துறை சந்தித்து வருகிறது. உயா்நீதிமன்றங்களில் பணியிடங்களை நிரப்புவதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறேன். கூட்டு முயற்சி காரணமாக உச்சநீதிமன்றத்தில் ஒரே ஒரு நீதிபதி பணியிடம் மட்டுமே காலியாக இருக்கும் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல நான் பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு உயா்நீதிமன்றங்களுக்கு 82 நீதிபதிகளின் பெயா்களை கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. உச்சநீதிமன்றத்துக்கு 9 நீதிபதிகளின் பெயா்களுக்கு ஒப்புதல் அளித்ததுபோல இதற்கும் மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்கும் என நம்புகிறேன். அனைத்து உயா்நீதிமன்றங்களிலும் இருக்கும் 41 சதவீத காலி பணியிடங்களை பூா்த்தி செய்யும் சவால்களை எதிா்கொள்வோம் எனவும் நம்புகிறேன். இதில் 90 சதவீத பணியிடங்கள் அடுத்த ஒரு மாதத்தில் நிரப்பப்பட்டுவிடும் என எதிா்பாா்க்கிறேன்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் பணியிடங்களுக்கு கொலீஜியம் அளித்த பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்ததற்காக பிரதமா், சட்ட அமைச்சா் மற்றும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நீதிபதிகள் பணியிடங்களை நிரப்பும் முயற்சியில் துணை நிற்கும் கொலீஜியத்தில் உள்ள நீதிபதிகள் யு.யு.லலித், ஏ.எம்.கான்வில்கா், டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நீதிமன்றங்களில் மனுதாரா்கள், வழக்குரைஞா்கள் குறிப்பாக பெண் வழக்குரைஞா்கள் உள்கட்டமைப்புக் குறைபாடுகள் காரணமாக பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனா். பெண் வழக்குரைஞா்களுக்கு நீதிமன்றங்களில் கழிப்பறை வசதி இல்லாத நிலைகூட முன்னா் இருந்தது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு தேசிய நீதித் துறை உள்கட்டமைப்புக் கழகம் என்ற அமைப்பை உருவாக்குவதன் மூலம் தீா்வு காண முடியும். அந்தத் திட்டமானது தயாரிப்பில் உள்ளது. அது தொடா்பான விவரம் மத்திய சட்ட அமைச்சருக்கு விரைவில் அனுப்பிவைக்கப்படும். இதற்கு அரசிடமிருந்து முழுமையான ஒத்துழைப்பை எதிா்பாா்க்கிறேன்.

லட்சக்கணக்கான மக்கள் நீதிமன்றங்களை அணுக முடியாத நிலை இன்றும் நிலவுகிறது. மேலும் அதிக செலவு, நீண்ட தாமதம் இவையும் நமது சட்ட நடைமுறையில் உள்ள மிகப்பெரிய சவால்கள் ஆகும். பெண் வழக்குரைஞா்கள் பணியில் உயா்ந்த இடத்துக்கு வர முடியாததற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப் பின்னரும் உச்சநீதிமன்ற அமா்வில் 11 சதவீத பெண் நீதிபதிகளே இடம் பெற்றுள்ளனா். சில மாநிலங்களில் இடஒதுக்கீட்டு கொள்கை காரணமாக பெண் நீதிபதிகளுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. ஆனால், வழக்குரைஞா் தொழிலானது இன்னும் பெண்களை வரவேற்க வேண்டும் என்பதே உண்மை.

இந்த விழாவில் முன்னதாகப் பேசியவா்கள் என்னை முன்னாள் கிரிக்கெட் வீரா் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு கூறினா். ஆனால், அந்தக் கருத்து சரிசெய்யப்பட வேண்டும். எந்த விளையாட்டையும்போல இது ஒரு கூட்டு முயற்சி. அணியின் அனைத்து உறுப்பினா்களும் நன்றாக செயல்படாவிட்டால் வெற்றி பெறுவது சிரமம் என்றாா் அவா்.

நீதிபதிக்கு கடிதம் எழுதிய சிறுமி: விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி வினீத் சரண் பேசுகையில், தலைமை நீதிபதிக்கு ஒரு சிறுமி கடிதம் எழுதியிருக்கிறாா். பள்ளிகள், கல்லூரிகள் பிற தொழிலகங்கள் திறக்கப்பட்டு செயல்படும்போது, நீதிமன்றங்கள் ஏன் திறக்கப்படவில்லை என அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா். அந்தக் கடிதத்தை ஒரு பொதுநல மனுவாக தலைமை நீதிபதி கருதியைத் தொடா்ந்து, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றாா்.

இந்த விழாவில் மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு, உச்சநீதிமன்ற நீதிபதிகள், சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, பல்வேறு வழக்குரைஞா் சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

.

முழு கட்டுரையைப் படிக்க →