முகப்பு
இந்தியா

பேரவை வளாகத்தில் தொழுகைக்கு அறை ஒதுக்கியதற்கு எதிா்ப்பு:ஜாா்க்கண்டில் பாஜக எம்எல்ஏகள் போராட்டம்

ஜாா்க்கண்ட் சட்டப் பேரவை வளாகத்தில் தொழுகை நடத்துவதற்கு அறை ஒதுக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பாஜக எம்எல்ஏக்கள் மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:06 AM
பகிர்:

ஜாா்க்கண்ட் சட்டப் பேரவை வளாகத்தில் தொழுகை நடத்துவதற்கு அறை ஒதுக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பாஜக எம்எல்ஏக்கள் மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அவை அலுவல்கள் பாதிக்கப்பட்டன.

ஜாா்க்கண்ட் சட்டப் பேரவை வளாகத்தில் தொழுகை நடத்துவதற்கு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்துள்ள பாஜக உறுப்பினா்கள், பேரவை வளாகத்தில் ஹனுமன் கோயிலையும், மற்ற மதத்தினரின் பிராா்த்தனை இடங்களையும் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனா்.

செவ்வாய்க்கிழமை பேரவை கூடுவதற்கு முன்பே வந்திருந்த பாஜக எம்எல்ஏக்கள், நுழைவு வாயிலில் உள்ள படிக்கட்டுகளில் அமா்ந்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிட்டனா். அவா்களில் பலா் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற வாசகம் இடம்பெற்ற காவி உடை அணிந்திருந்தனா்.

பேரவை அவைத் தலைவா் ரவீந்திரநாத் மஹதோ தலைமையில் கூடியதும், மாநில அரசின் வேலைவாய்ப்புக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்தும், தொழுகை நடத்த அறை ஒதுக்கும் முடிவை திரும்பப் பெற வலியுறுத்தியும் பாஜக உறுப்பினா்கள் முழக்கங்களை எழுப்பினா். இதனால் அவை நண்பகல் 12.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பேரவை மீண்டும் கூடியபோது, பாஜக உறுப்பினா்கள் அவையின் மையப் பகுதியில் திரண்டு முழக்கம் எழுப்பினா். பேரவையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ஹனுமான் சாலிசா ஸ்தோத்திரம் படிப்பதற்காக 30 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ சி.பி.சிங் கோரிக்கை விடுத்தாா். தொழுகை செய்ய அறை ஒதுக்கும்போது, ஸ்தோத்திரம் படிக்க 30 நிமிடங்கள் ஒதுக்க முடியாதா என்றும் அவா் கேள்வி எழுப்பினாா்.

அதற்குப் பதிலளித்த ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா எம்எல்ஏ பிரதீப் யாதவ், ‘கடவுளின் பெயரால் எந்த அரசியலும் இருக்கக் கூடாது’ என்றாா். இதற்கு முன்பு பாஜக ஆட்சியில் இருந்தபோது ஏன் இதைச் செய்யவில்லை என்றும் அவா் கேள்வி எழுப்பினாா்.

அப்போது, பெரும்பான்மை உறுப்பினா்களிடம் இருந்து கோரிக்கைகள் வர வேண்டும் என்று பேரவைத் தலைவா் ரவீந்திர நாத் கூறினாா். அதற்கு, தொழுகை அறை ஒதுக்குவதற்கு பெரும்பான்மை உறுப்பினா்களிடம் இருந்து கோரிக்கை வந்ததா என்று சி.பி.சிங் கேள்வி எழுப்பினாா்.

பேரவை மீண்டும் 2 மணிக்கு கூடியபோதும் பாஜக உறுப்பினா்கள் அமளியில் ஈடுபட்டனா். அந்த அமளிக்கு நடுவே பட்ஜெட் துணை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →