முகப்பு
இந்தியா

இந்திய எல்லையையொட்டிய பகுதி சீனப் படைகளுக்கு கமாண்டர் நியமனம்

இந்தியாவுடனான எல்லையைக் கண்காணிக்கும் சீன ராணுவத்தின் மேற்குப் பிராந்திய கட்டளைப் பிரிவின் கமாண்டராக வாங் ஹைஜியாங்கை சீன அதிபர் ஷி ஜின்பிங் நியமித்துள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:06 AM
பகிர்:

இந்தியாவுடனான எல்லையைக் கண்காணிக்கும் சீன ராணுவத்தின் மேற்குப் பிராந்திய கட்டளைப் பிரிவின் கமாண்டராக வாங் ஹைஜியாங்கை சீன அதிபர் ஷி ஜின்பிங் நியமித்துள்ளார்.
 வாங் மற்றும் நான்கு ராணுவ அதிகாரிகளுக்கு தளபதிகளாக பதவி உயர்வு அளித்து சீன அதிபரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவருமான ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு அரசு இணையதளமான சைனாமில் செய்தி வெளியிட்டுள்ளது.
 வாங் ஹைஜியாங் தவிர, சீன ராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு கமாண்டர் லின் ஜியாங்யாங், கடற்படையின் கமாண்டர் டாங் ஜுன், விமானப்படை கமாண்டர் சாங் டிங்கியூ, ராணுவத்தின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தலைவர் ஜு ஜுயேகியாங் ஆகியோரே பதவி உயர்வு அளிக்கப்பட்ட மற்ற நால்வர் ஆவர்.
 சீன ராணுவச் சேவையில் அதிகாரிகளுக்கு தளபதி என்பதே உயர் பதவி என்பது குறிப்பிடத்தக்கது.
 இந்தியாவின் கிழக்கு லடாக் பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் மோதல் ஏற்பட்ட பிறகு சீன மேற்குப் பிராந்திய கட்டளைப் பிரிவின் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ள நான்காவது அதிகாரி வாங் ஹைஜியாங் ஆவார்.
 கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் சோ, கோக்ரா ஆகிய பகுதிகளில் இருந்து இரு தரப்பும் வெளியேறிய பிறகு பதற்றம் பெருமளவு குறைந்துள்ளது. ஆனால் கிழக்கு லடாக்கில் உள்ள ஹாட் ஸ்பிரிங்ஸ், டெப்சாங் உள்ளிட்ட பகுதிகளில் படைக் குறைப்பு இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
 சீனாவின் மேற்குப் பிராந்திய கட்டளைப் பிரிவானது ஜின்ஜியாங், திபெத் தன்னாட்சிப் பகுதி மற்றும் இந்தியாவுடனான எல்லைப் பகுதி ஆகியவற்றை மேற்பார்வையிடுகிறது. சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் இந்தப் பிரிவின் கீழ்தான் அதிகமான நிலப்பரப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
 சீன ராணுவத்தின் மேற்குப் பிராந்திய கட்டளைப் பிரிவின் கமாண்டராக ஜு கிலிங்கை அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் கடந்த ஜூலையில் நியமித்தார். தற்போது அப்பொறுப்புக்கு வாங் ஹைஜியாங் நியமிக்கப்பட்டுள்ளதால், ஜு கிலிங்கிற்கு அளிக்கப்பட உள்ள புதிய பொறுப்பு என்ன என்பது தெரியவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →