இந்தியா

அரசு நிதி அல்ல, பிஎம் கேர்ஸ் நிதி: நீதிமன்றத்தில் தகவல்

DIN


பிஎம் கேர்ஸ் நிதியானது அரசு நிதி அல்ல என்றும், இதன் மூலம் பெறப்பட்ட நிதி இந்தியாவின் நிதித் தொகுப்பைச் சென்றடையாது என்றும் தில்லி உயர் நீதிமன்றத்தில் பிஎம் கேர்ஸ் நிதியப் பணிகளைக் கவனித்துக் கொள்ளும் பிரதமர் அலுவலகத்தின் துணைச் செயலர் தெரிவித்துள்ளார்.

கரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள பிஎம் கேர்ஸ் நிதித் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்தாண்டு ஏற்படுத்தினார். இதன் வெளிப்படைத் தன்மை குறித்து தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கில் பிரதமர் அலுவலகத்தின் துணைச் செயலரும் நிதியின் பணிகளை மதிப்பூதியம் மட்டும் பெற்றுக் கவனித்துக்கொள்பவருமான பிரதீப் குமார் ஸ்ரீவாஸ்தவா பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

"வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காகத் தணிக்கை செய்யப்படும் அறிக்கை அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் பதிவிடப்படுகிறது. அறக்கட்டளைக்கு வரும் தொகை எதற்கெல்லாம் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்த விவரங்களும் அதில் இணைக்கப்பட்டுள்ளன.

அறக்கட்டளைக்கு வந்த பணம் அனைத்தும் இணைய வழியாகவும் காசோலையாகவும் அல்லது டிடியாகவும்தான் பெறப்பட்டுள்ளன. பெறப்பட்ட தொகை அனைத்தும் தணிக்கை செய்யப்பட்டுள்ளன. செலவினங்களும் இணையப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நிதி அரசு நிதி அல்ல. இதில் சேரும் நிதி எதுவும் இந்திய நிதித் தொகுப்பைச் சேராது.

மற்ற அறக்கட்டளைகளைப் போல பொது நலனுடனும், வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படுவதற்கான கொள்கைகளுடனே பிஎம் கேர்ஸ் அறக்கட்டளையும் இயங்கி வருகிறது. எனவே, வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய அறக்கட்டளையின் தீர்மானங்கள் அனைத்தையும் இணையப் பக்கத்தில் பதிவேற்றுவதில் எந்தத் தடையும் இல்லை.

எந்தவொரு நாடாளுமன்ற சட்டத்தாலும் அல்லது பேரவை சட்டத்தாலும் நிறைவேற்றப்படாமல், அரசியலமைப்பின் கீழ் வராத அறக்கட்டளை இது. மத்திய அரசின் ஊழியராக இருந்தபோதிலும், மதிப்பூதியம் மட்டும் பெற்றுக்கொண்டு பிஎம் கேர்ஸ் அறக்கட்டளைப் பணிகளை மேற்கொள்ள நான் அனுமதிக்கப்பட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார் வாஸ்தவா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT