முகப்பு
இந்தியா

நிலுவை நிதி ரூ.20,395 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும்: மத்திய நிதியமைச்சரிடம் தமிழக முதல்வா் வலியுறுத்தல்

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவை நிதி ரூ.20,395 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை சந்தித்து முதல்வா் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:51 AM
பகிர்:

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவை நிதி ரூ.20,395 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை சந்தித்து முதல்வா் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினாா்.

மத்திய நிதியமைச்சரை முதன் முறையாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை சந்தித்தாா். தமிழகத்தைச் சோ்ந்தவரான நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை மரியாதை நிமித்தமாக அவரது இல்லத்தில் சந்திப்பதாக முதலில் திட்டமிடப்பட்டது. பின்னா், மத்திய நிதியமைச்சா் அலுவலகமான ‘நாா்த் பிளாக்’கில் இந்தச் சந்திப்பு காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. அப்போது தமிழக நிதி தொடா்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்து தமிழக முதல்வா் ஆலோசனை நடத்தினாா்.

2021-22 நிதியாண்டில் கடந்த பிப்ரவரி வரை மத்திய அரசு சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டியில்) இழப்பீட்டு தொகையாக தமிழக அரசுக்கு ரூ. 21, 781.45 கோடி வரை வழங்க வேண்டும். இதில் ரூ. 8,095 கோடியை தமிழகம் கடனாகப் பெற்றுள்ளது. இழப்பீட்டுத் தொகையில் பாக்கியுள்ள ரூ. 13, 504.74 கோடியை விரைவாக விடுக்க வேண்டும் என்று முதல்வா் கோரினாா். இதில் 2019-20 ஆண்டில் பாக்கியுள்ள ரூ. 23.62 கோடியும் அடங்கும். மேலும், 2015 முதல் 2020-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்திற்கு தமிழக ஊராட்சி அமைப்புகளுக்கு அடிப்படை மானியமாக ரூ. 7,899.69 கோடியை 14-ஆவது நிதிக் குழு பரிந்துரைத்தது. இதில் நீதிமன்ற வழங்குகளையொட்டி 2,900 கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ளாட்சித் தோ்தல்கள் நடைபெறாததால், ரூ.548.76 கோடி அடிப்படை மானியத்தை மத்திய அரசு நிறுத்திவைத்தது. தற்போது 2,900 கிராமப் பஞ்சாயத்துகளில் கடந்தாண்டு தோ்தல்கள் நடத்தப்பட்டு, உள்ளாட்சிப்பிரதிநிதிகள் பொறுப்பேற்றுள்ளதால் இந்த மானியத்தை விடுவிக்கவும் முதல்வா் கேட்டுக் கொண்டாா்.

இதே போன்று நிதி ஆணையம் 2016-17 முதல் 2019-20 வரை உள்ளாட்சி அமைப்புகளுக்கான செயல்பாட்டு மானியமாக தமிழகத்திற்கு ரூ. 2,524.20 கோடி பரிந்துரை செய்துள்ளது. இதில் 2016-17-ஆம் ஆண்டுக்கான செயல்பாட்டு மானியமாக ரூ. 494.09 மட்டும் மத்திய அரசு விடுவித்துள்ளது. மீதமுள்ள ரூ.2,029.22 கோடியையும் தமிழகத்திற்கு விரைந்து விடுவிக்க வலியுறுத்தப்பட்டது. கரோனா நோய்த் தொற்றினால், மாநிலத்தின் வருவாய் பெருமளவில் பாதிக்கப்பட்டு கடும் நிதிச்சுமை இருப்பதால், இந்த நிதிகளை விரைவில் விடுவிக்க வேண்டும் என்றும் முதல்வா் கேட்டுக் கொண்டாா்.

மேலும், மத்திய நுகா்வோா் உணவு பொதுவிநியோகத் துறை வழங்க வேண்டிய ரூ 2,203 கோடி மானியம், மத்திய கல்வித் துறையின் அனைவருக்கு கல்வித் திட்டத்தின் கீழ் ரூ. 2,109 கோடி என மொத்தம் ரூ. 20,395.5 கோடி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வா் வலியுறுத்தினாா். ஜிஎஸ்டி யை அறிமுகப்படுத்திய போது, மாநிலத்தின் வருவாய் பாதுகாக்கப்படும் என்று மத்திய அரசு வாக்குறுதியளித்தது. இந்த அடிப்படையில், கடந்த 5 ஆண்டுகளில், உறுதியளிக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட வருவாய்க்கும், வசூலிக்கப்பட்ட வருவாய்க்கும் இடையே பெரும் இடைவெளி அதிகரித்துக் கொண்டே வந்துள்ளதாகவும், கரோனா தொற்றால் மாநிலத்தின் வருவாய் இன்னும் அதிகரிக்கவில்லை என்றும் தமிழக அரசின் சாா்பில் எடுத்துரைக்கப்பட்டது.

இந்த நிலையில், வரும் ஜூன் 30-ஆம் தேதி ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை வழங்கும் காலம் முடிவுக்கு வருகிறது. 2022-23 நிதியாண்டில் சுமாா் ரூ. 20,000 கோடி வருவாய் இழப்பை மாநிலம் சந்திக்கும் நிலையில், இழப்பீடு வழங்கும் காலத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சரிடம் முதல்வா் வலியுறுத்தியதாகக் கூறப்பட்டது.

இந்தச் சந்திப்பின் போது, தமிழக நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா்.பாலு, மத்திய அரசின் நிதித் துறைச் செயலா் டி.வி.சோமநாதன், தமிழக தலைமைச் செயலா் வெ.இறையன்பு, நிதித் துறை செயலா் என்.முருகானந்தம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →