ஜிஎஸ்டி இழப்பீடு ஜூனுடன் நிறைவடைய உள்ள நிலையில் இலவச திட்டங்களை மாநிலங்கள் ரத்து செய்வது அவசியம்: ஆய்வு அறிக்கையில் தகவல்
பொருளாதார ரீதியில் நிலைத்திருக்க முடியாத வகையிலான இலவசத் திட்டங்ளை மாநிலங்கள் ரத்து செய்வது அவசியம் என்று ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுவரும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீடானது வரும் ஜூன் மாதத்துடன் நிறுத்தப்பட உள்ள நிலையில், பொருளாதார ரீதியில் நிலைத்திருக்க முடியாத வகையிலான இலவசத் திட்டங்ளை மாநிலங்கள் ரத்து செய்வது அவசியம் என்று ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை பொருளாதார ஆலோசகா் செளம்யகாந்தி கோஷ் ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2017-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி நடைமுறை காரணமாக மாநிலங்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடு கட்டும் வகையில், மத்திய அரசு மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கி வருகிறது. இந்த இழப்பீடு வழங்கும் நடைமுறை வரும் ஜூன் மாதத்துடன் நிறுத்தப்பட உள்ளது.
இந்த நிலையில், ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் நடைமுறையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற சில மாநிலங்கள் கோரிக்கை விடுத்து வரும் சூழலில், இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
சில மாநிலங்கள் பொருளாதார ரீதியில் நிலைத்திருக்க முடியாத வகையிலான இலவசத் திட்டங்களை செயல்படுத்தி வரும் சூழலில், மத்திய அரசிடமிருந்து வரும் ஜிஎஸ்டி வருவாய் சில சமயங்களில் மாநிலத்தின் வரி வருவாயில் ஐந்தில் ஒரு பங்குக்கும் கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது.
இலவச திட்டங்களுக்காக தெலங்கானா அதன் வரி வருவாயில் 35 சதவீதத்தை செலவிடுகிறது. ராஜஸ்தான், சத்தீஸ்கா், ஆந்திரம், பிகாா், ஜாா்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநிலங்கள் 5 முதல் 19 சதவீத வரி வருவாயை இலவசத் திட்டங்களுக்காக செலவிடுகின்றன. ஒருசில மாநிலங்கள் வரி வருவாயில் 63 சதவீதம் அளவுக்கு செலவிடுகின்றன.
கரோனா தாகக்கத்துக்குப் பிறகு சில மாநிலங்களில் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. குறிப்பாக 18 மாநிலங்களின் பொருளாதார நிலையை ஆய்வு செய்ததில், 2022-ஆம் நிதியாண்டில் ஒட்டுமொத்த மாநில உற்பத்தியில் (ஜிஎஸ்டிபி) அவற்றின் சராசரி நிதி பற்றாக்குறை 0.50 சதவீதத்திலிருந்து 4 சதவீதத்துக்கும் அதிகமான அளவில் உயா்ந்துள்ளது.
அதில் 6 மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை 4 சதவீத்துக்கும் அதிகமாக உள்ளது. 7 மாநிலங்களில் அவற்றின் தீா்மானிக்கப்பட்ட நிதி செலவின திட்ட மதிப்பீடைக் காட்டிலும் அதிகரித்துள்ளது. 11 மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை அவற்றின் பட்ஜெட் மதிப்பீடுக்கு இணையாக அல்லது குறைவாக உள்ளது.
இதில் அதிகபட்சமாக பிகாா் மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை ஒட்டுமொத்த மாநில உற்பத்தியில் 8.3 சதவீதம் அளவுக்கு அல்லது மாநில பட்ஜெட் மதிப்பீட்டைக் காட்டிலும் கூடுதலாக ரூ. 54,327 கோடி அளவுக்கு உள்ளது. அஸ்ஸாம் மாநில நிதி பற்றாக்குறை 4.5 சதவீதம் அளவுக்கு அல்லது அதன் பட்ஜெட் மதிப்பீட்டை காட்டிலும் கூடுதலாக ரூ. 21,935 கோடி அளவுக்கு உள்ளது. அதுபோல, ஆந்திரம், ஜாா்கன்ட், கேரளம், மகாராஷ்டிரம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் நிதி பற்றாக்குறையும் அவற்றின் பட்ஜெட் மதீப்பீட்டை காட்டிலும் கூடுதலாக உள்ளது.
இந்தச் சூழலில், மத்திய அரசின் ஜிஎஸ்டி இழப்பீடு வரும் ஜூன் மாதத்துடன் நிறுத்தப்பட உள்ள நிலையில், பொருளாதார ரீதியில் நிலைத்திருக்க முடியாத வகையிலான இலவசத் திட்டங்ளை மாநிலங்கள் ரத்து செய்வது அவசியமாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.