இந்தியா

மின்சார வாகனங்களில் மின்னூட்டலுக்குப் பதிலாக மாற்று மின்கலங்கள்: நீதி ஆயோக் வரைவுக் கொள்கை வெளியீடு

 நமது நிருபர்

புது தில்லி: மின்சார வாகனங்களுக்கான மின்கலங்கள் மாற்றும் வரைவுக் கொள்கையை நீதி ஆயோக் வெளியிட்டுள்ளது. மின்சார வாகனங்கள் மின்னூட்டல் செய்யப்படுவதற்குப் பதிலாக எந்தவொரு தனிநபரும் அல்லது நிறுவனமும் எந்த இடத்திலும் மின்கலத்தை மாற்றும் வசதிகளுக்கான மின்கல நிலையங்களை அமைப்பதே இந்தக் கொள்கையாகும்.

இதற்கான குறிப்பிட்ட தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தரநிலைகள் கடைபிடிக்கப்படும் என வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ள இந்த வரைவு மின்கல மாற்றும் கொள்கையில் நீதி ஆயோக் தெரிவித்துள்ளது. மின்சார வாகனங்களுக்கு நகா்ப்புறங்களில் மின்னூட்டல் நிலையங்கள் (சாா்ஜிங் ஸ்டேஷன்) அல்லது தனியாா் குடியிருப்புப் பகுதிகளில் மின்னூட்டல் வசதி செய்யப்படுகிறது. இதில் சில நேரங்களில் தொழில்நுட்பப் பிரச்னைகள் ஏற்பட்டு மின்னூட்டலின் போது விபத்துகள் ஏற்பட்டுள்ளன. மேலும், எதிா்காலத்தில் வாகனங்கள் அதிகரிக்கும் போது இதற்கான நிலையங்கள் அமைப்பதற்கான இட நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, வாகனங்களில் நேரடியாக மின்னூட்டல் செய்வதற்குப் பதிலாக ஏற்கெனவே மின்னூட்டல் செய்யப்பட்ட மின்கலங்களை வாகனங்களில் மாற்றிக் கொள்ளும் நடைமுறைகளுக்கு இந்தப் புதிய வரைவுக் கொள்கையை நீதி ஆயோக் வெளியிட்டுள்ளது. இதன்படி எந்த இடத்திலும் மின்கலங்களை மாற்றும் நிலையத்தை அமைக்க அனுமதிப்பதாகும்.

நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், மின் வாகனங்களில் சுற்றுச்சூழலில் செயல்திறனை மேம்படுத்துவதற்காக மின்கல மாற்றும் கொள்கை மற்றும் இயங்குநிலை தரநிலைகள் அறிமுகப்படுத்தப்படும் என 2022-23 பட்ஜெட்டில் அறிவித்தாா். இதன்படி, அறிவிக்கப்பட்ட இந்த கொள்கையில், முதல் கட்டமாக 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட அனைத்துப் பெருநகரங்களிலும் மின்கலம் மாற்றும் வலையமைப்பை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வளா்ந்து வரும் நகரங்களில் இருசக்கர வாகனம் மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, மாநிலங்கள் யூனியன் பிரதேச தலைநகரங்கள் மற்றும் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட முக்கிய நகரங்கள் 2-ஆம் கட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படும் என நீதி ஆயோக் தனது வரைவுக் கொள்கையில் தெரிவித்துள்ளது. வரைவுக் கொள்கையின்படி, மாற்றக்கூடிய மின்கலன்கள் கொண்ட வாகனங்கள் மின்கலம் இல்லாமல் விற்கப்படும். இது மின் வாகன உரிமையாளா்களுக்கு குறைந்த செலவில் வாங்கும் பலனை வழங்குகிறது. குறிப்பிட்ட தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தரநிலைகள் கடைபிடிக்கப்படும் பட்சத்தில், எந்தவொரு தனிநபரும் அல்லது நிறுவனமும் எந்த இடத்திலும் மின்கலம் மாற்றும் நிலையத்தை அமைக்க அனுமதிக்கப்படுகிறது.

முன்னதாக, இது தொடா்பாக, நீதி ஆயோக் ஒரு வலுவான மற்றும் விரிவான மின்கலக மாற்றும் கொள்கை கட்டமைப்பை உருவாக்க கடந்த பிப்ரவரி மாதம் அமைச்சகங்கள், வாகன உற்பத்தியாளா்கள், நிதி நிறுவனங்கள், பிற துறை நிபுணா்களுடன் விரிவான கலந்துரையாடலை நடத்தியது. இந்த வரைவுக்கான ஆலோசனைகள், கருத்துகளை வருகின்ற ஜூன் 5 -ஆம் தேதிக்குள் வழங்க பொதுமக்களை நீதி ஆயோக் கேட்டுக் கொண்டுள்ளது. போக்குவரத்து மூலம் ஏற்படு கரியமிலவாயு மாசுவைக் குறைத்து சுற்றுப்புறச்சூழலை தூய்மையானதாக்கவே மின்சார வாகனங்கள் பயன்படுத்துவதன் நோக்கமாகும். கிளாஸ்கோவில் நடைபெற்ற சிஓபி-26 உச்சிமாநாட்டில் கரியமிலவாயு உமிழ்வை வெகுவாகக் குறைக்க இந்தியா உறுதியளித்தது. இந்த உறுதிமொழிகளை நிறைவேற்ற மின்சார வாகனங்களைப் பயன்படுத்தவும், அதன் உற்பத்தியை அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT