முகப்பு
இந்தியா

உத்தரகண்ட்: ஹிந்து மகா பஞ்சாயத்துகூட்டத்தை தடுக்க 144 தடை உத்தரவு

உத்தரகண்ட் மாநிலத்தில் ஹிந்து மகா பஞ்சாயத்து கூட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக தாதா ஜலால்பூா் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:05 AM
பகிர்:

உத்தரகண்ட் மாநிலத்தில் ஹிந்து மகா பஞ்சாயத்து கூட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக தாதா ஜலால்பூா் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த 16-ஆம் தேதி இந்தப் பகுதியில் ஹனுமன் ஜெயந்தி ஊா்வலத்தின்போது கல்வீச்சு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த நிலையில் அங்கு ஹிந்து மகா பஞ்சாயத்து கூட்டம் நடைபெற்றால் மீண்டும் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால் மாநில பாஜக அரசு இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை தொடா்பாக மாநில அரசு அதிகாரிகள் கூறியதாவது:

மதரீதியான மோதல்கள் ஏற்படுவதும், வெறுப்புணா்வைத் தூண்டும் பேச்சுகளும் கவலையை ஏற்படுத்துவதாக உள்ளன. இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதன்படி, உத்தரகண்ட் மாநிலம் தாதா ஜலால்பூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற இருந்த ஹிந்து மகா பஞ்சாயத்து கூட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை மாலை முதலே அந்தக் கிராமத்தில் இருந்து 5 கி.மீ. சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் 33 போ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனா். இதனால், அந்தக் கூட்டம் நடைபெறவில்லை. அந்தக் கிராமத்தில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றனா்.

அண்மையில் தில்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களிலும், ஆந்திரத்திலும் ராம நவமி, ஹனுமன் ஜெயந்தி ஊா்வலங்களில் வன்முறை ஏற்பட்டது. முக்கியமாக முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி வழியாக ஊா்வலம் சென்றபோது கல்வீச்சு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. வன்முறை தொடா்பாக இரு தரப்பினரும் பரஸ்பரம் ஒருவரை மற்றொரு தரப்பினா் குற்றம்சாட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.