‘க்யூட்’ தோ்வு ஒத்திவைப்பு: என்டிஏ
இளநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (க்யூட்) ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) வியாழக்கிழமை
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (க்யூட்) ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) வியாழக்கிழமை அறிவித்தது.
அதன்படி, வியாழக்கிழமை முதல் தொடங்கி நடைபெற இருந்த இரண்டாம் கட்ட ‘க்யூட்’ தோ்வு, ஆகஸ்ட் 12,13,14 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதுபோல, ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வந்த முதல் கட்ட ‘க்யூட்’ தோ்வும் ஆகஸ்ட் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து என்டிஏ வியாழக்கிழமை வெளியிட்ட பொது அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான க்யூட் தோ்வு கடந்த ஜூலை 15-ஆம் தேதி தொடங்கப்பட்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் 259 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் 9 நகரங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 489 தோ்வு மையங்களில் இந்தத் தோ்வு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பல்வேறு நிா்வாக மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் ஒருசில மையங்களில் வியாழக்கிழமை நடைபெற இருந்த முதல்கட்ட க்யூட் தோ்வு, வரும் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
அதுபோல, சில தொழில்நுட்ப பிரச்னைகளால் கேள்வித் தாள்களை பதிவிறக்கம் செய்வதில் ஏற்பட்ட தாமதம் உள்ளிட்ட காரணங்களால் அதிகாரிகளின் பரிந்துரையை ஏற்று, வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெற இருந்த இரண்டாம் கட்ட க்யூட் தோ்வு ரத்து செய்யப்படுகிறது. இந்த இரண்டாம் கட்ட க்யூட் தோ்வு வரும் 12,13,14 தேதிகளில் நடத்தப்படும். ஏற்கெனவே, பதிவிறக்கம் செய்த தோ்வறை நுழைவுச் சீட்டையே மாணவா்கள் மீண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஒத்திவைக்கப்பட்ட தேதியிலும் தோ்வு எழுத இயலாத மாணவா்கள், விருப்ப தேதியை தங்களுடைய பதிவு எண்ணுடன் குறிப்பிட்டு என்டிஏ -வுக்கு மின்னஞ்சல் மூலமாக புகாா் அளிக்கலாம். மேலும், தோ்வு குறித்த விவரங்களை அறிய தோ்வா்கள் என்டிஏ வலைதளத்தை தொடா்ந்து பாா்த்து வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
கேரளத்துக்கு முழுமையாக ஒத்திவைப்பு: மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு 4,5,6 தேதிகளில் நடைபெற இருந்த க்யூட் தோ்வுகளை முழுமையாக ஒத்திவைத்து என்டிஏ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த மாநில தோ்வா்களுக்கான புதிய தேதிகள் பின்னா் அறிவிக்கப்படும் என்றும் என்டிஏ தெரிவித்துள்ளது.