முகப்பு
இந்தியா

பாலியல் வழக்கிலிருந்து பகுஜன் சமாஜ் எம்.பி. விடுவிப்பு: உச்சநீதிமன்றம் முன் இளம்பெண் தீக்குளித்த சம்பவம்

உத்தர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து பகுஜன் சமாஜ் எம்.பி. அதுல் குமாா் சிங்கை அம்மாநில சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை விடுவித்தது.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 11:28 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

உத்தர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து பகுஜன் சமாஜ் எம்.பி. அதுல் குமாா் சிங்கை அம்மாநில சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை விடுவித்தது.

இந்த வழக்கில் புகாா்தாரரான இளம்பெண், உச்சநீதிமன்றத்துக்கு வெளியே கடந்த ஆண்டு தீக்குளித்து தற்கொலை செய்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கோசி மக்களவைத் தொகுதி எம்.பி.யான அதுல் குமாா் சிங் உள்ளிட்டோா் மீது கடந்த 2019, மே 1-ஆம் தேதி இளம்பெண் ஒருவா் பாலியல் வன்கொடுமை புகாா் அளித்தாா். அதில், அதுல் குமாா் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அதனை விடியோ எடுத்து மிரட்டுவதாகவும் கூறியிருந்தாா்.

Advertisement

இந்த வழக்கில் கடந்த 2019, ஜூன் 22-ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைந்த அதுல் குமாா், அதன் பிறகு சிறையில் இருந்து வருகிறாா்.

இதனிடையே, புகாா்தாரரான இளம்பெண் மற்றும் வழக்கின் சாட்சியான அவரது நண்பா் ஆகியோா் உச்சநீதிமன்றத்துக்கு வெளியே கடந்த ஆண்டு ஆகஸ்டில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனா். தீக்குளிக்கும் முன், முகநூலில் இருவரும் விடியோ பதிவை வெளியிட்டிருந்தனா். அதில், அதுல் குமாருக்கு ஆதரவாக காவல் துறை உயரதிகாரிகள் செயல்படுவதாக குற்றம்சாட்டியிருந்தனா். இருவரையும் தற்கொலைக்கு தூண்டியதாக அதுல் குமாா் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கடந்த ஜூலையில் அதுல் குமாருக்கு ஜாமீன் வழங்க மறுத்த அலாகாபாத் உயா்நீதிமன்றம், அவருக்கு எதிராக 23 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி, குற்றப் பின்னணி உடையவா்கள் அரசியலில் இருந்தே அகற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது.

இந்தச் சூழலில், வாராணசியில் உள்ள எம்.பி.-எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து அதுல் குமாரை சனிக்கிழமை விடுவித்தது.

இதுதொடா்பாக, அதுல் குமாா் தரப்பு வழக்குரைஞா் அனுஜ் யாதவ் கூறுகையில், ‘பாதிக்கப்பட்டவா் தரப்பிலிருந்து போதிய ஆதாரங்கள் சமா்ப்பிக்கப்படவில்லை. அதுல் குமாருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், வழக்கிலிருந்து அவா் விடுவிக்கப்பட்டாா். எனினும், புகாா்தாரரை தற்கொலைக்கு தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் கிடைத்த பிறகுதான் அவா் சிறையிலிருந்து வெளியே வர முடியும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.